ஈரோட்டில் தெரு நாய்களுக்கு ஆடுகளை பறிகொடுத்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி, உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
முன்னதாக சென்னிமலை ராமலிங்கபுரத்தை சேர்ந்த வசந்தா மணி, 55 மற்றும் பால சுப்பிரமணியம், 34 ஆகிய விவசாயிகள் மிகுந்த மனவேதனைவுடன் அண்ணாமலையை நேரில் சந்தித்து, தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளான ஆடுகளை, தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு பறி கொடுத்தது குறித்து விளக்கமாக கோரிக்கை விடுத்தனர்,
விவசாயி வசந்தா மணி கூறுகையில், 15 ஆடுகளை பட்டியில் வைத்து வளர்த்தேன். வெறி நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பலியாகின, மூன்று ஆடுகள் நிலைமை மோசமாக உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு விவசாயியான பால சுப்பிரமணியம் கூறுகையில், தங்களது பட்டியில் இருந்த 20 ஆடுகளை, தெருநாய்கள் கடித்து குதறிவிட்டன, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால் இழப்பீடு கிடைக்குமா? என தெரியவில்லை என்பதுடன் எங்களின் கால்நடைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடுமையான மன வேதனையுடன் பாஜக மாநில தலைவரிடம் தெரிவித்துள்ளோம்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது, பெருமளவில் பண இழப்பும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆடுகளை வாங்க வசதி இல்லை, வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறோம் என்றனர்.
விவசாயிகளுக்கு அண்ணாமலை ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.எம் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் உரிய இழப்பீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைப்பதாகவும் விவசாயிகளுக்கு உறுதி அளித்ததுடன், நேரில் வந்து சம்பவ இடத்தையும் பார்வையிடுவதாக தெரிவித்துள்ளார்.
0 coment rios: