திங்கள், 10 மார்ச், 2025

மொடக்குறிச்சியில் இரண்டு பகுதி நேர ரேஷன் கடைகள்: அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

மொடக்குறிச்சியில் இரண்டு பகுதி நேர ரேஷன் கடைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,229 ரேஷன் கடைகள் 899 முழுநேரம் மற்றும் 330 பகுதி நேர கடைகள் மூலம் 7.64 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மொடக்குறிச்சி அருகே உள்ள டி.கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் முழு நேர ரேஷன் கடையான லிங்காத்தாகுட்டை ரேஷன் கடை 1,069 குடும்ப அட்டைகள் உடன் செயல்பட்டு வருகிறது.


இந்த ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்த தெக்கலூர் பகுதி மக்கள் லிங்காத்தாகுட்டை ரேஷன் கடையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர்.

இதனால், இப்பகுதி மக்கள் பயண தூரத்தை குறைத்து தங்கள் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கோரிக்கை வைத்தனர் .

அதன் அடிப்படையில், சின்னமணியம்பாளையத்தில் பிரதிவாரம் புதன் கிழமை செயல்படும் வகையில் பெரியமணியம்பாளையம், சின்னமணியம்பாளையம், சின்னக்குளம், நேருநகர், குமாரவலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 304 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பிரதிவாரம் செவ்வாய்கிழமை தெக்கலூரில் செயல்படும் வகையில் சின்னக்கிணத்துப்பாளையம், தெக்கலூர், வெள்ளக்கவுண்டன்வலசு, பொண்ணாத்தாவலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 267 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு பகுதி நேர ரேஷன் கடையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு பகுதி நேர ரேஷன் கடைகளையும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதன் மூலம், மொடக்குறிச்சி வட்டத்தில் 74 முழு நேர ரேஷன் கடைகளும், 24 பகுதிநேர ரேஷன் கடைகளும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 2 பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டு மொத்தம் 100 ரேஷன் கடைகள் செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் பாலாஜி, புனிதா, மொடக்குறிச்சி வட்ட வழங்கல் அலுவலர் நாகலட்சுமி, கூட்டுறவு சங்க செயலாட்சியர் கிருத்திகா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: