S.K. சுரேஷ்பாபு.
ஓமலூர் அருகே பாமக எம்எல்ஏ மற்றும் பாமகவினர், திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வரால் பூஜை போடப்பட்ட பணிக்கு மீண்டும் எம்எல்ஏ பூஜை போடுவதாக கூறி திமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாலகுட்டப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு கட்டிடம் இல்லாததால், கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கியது. கட்டுமான பணிகளை கடந்த மாதம் 13ஆம் தேதி, முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த நிலையில், இன்று கட்டுமான பணிகளை பூஜை செய்து துவக்கி வைக்க சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், பாலகுட்டப்பட்டி கிராமத்திற்கு வந்தார். அப்போது, கிராம மக்களும் திமுகவினரும், ஏற்கனவே முதல்வர் துவக்கி வைத்து விட்டதால், மீண்டும் பூஜை போட வேண்டாம் என்று தெரிவித்தனர். மேலும், எதுவாக இருந்தாலும் சேலம் அமைச்சருடன் சேர்ந்து வந்து செய்யுமாறு கூறினர். அப்போது எம்எல்ஏ அங்கு தரையில் அமர்ந்து கற்பூரம் பொருத்தி பூஜை போட்டு சாமி கும்பிட்டார். இதை தொடர்ந்து அங்கு பாமக, திமுக, பொதுமக்கள் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது தொடர்ந்து ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார், இரு தரப்பையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுருத்தினர். மேலும், எம்எல்ஏ அருளையும் அங்கிருந்து அழைத்து வந்தனர். பின்னர் பாமகவினர், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வந்திருந்த அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.எல்.ஏ அருள் கூறும்போது, நான் பூஜை செய்ய வரவில்லை, இடத்தைப் பார்த்து பணிகளை பார்க்கவே வந்தேன். ஆனால், திமுகவினர், வாக்குவாதம் செய்து என்னையே தள்ளிவிட்டனர் என்று தெரிவித்தார். திமுக ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன் கூறும்போது, ஏற்கனவே முதலமைச்சரால் பூஜை போடப்பட்ட, பணியை மீண்டும் பூஜை போடுவதால், அமைச்சரையும் அழைத்து வந்து பணிகளை செய்யலாம் என்று தெரிவித்தோம். ஆனால் அவர் உதாசீனப்படுத்தி எங்களை தள்ளி விட்டார். பாமகவினரும் எங்களை தாக்க முற்பட்டனர். இங்கு பள்ளிக்கூடம் வருவதற்கு பாமக எந்த பணியையும் செய்யவில்லை, இந்த இடத்தை ஒதுக்க கூட அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை இடத்தை கிராம மக்களுடன் சேர்ந்து திமுகவினர் சமன் செய்து உருவாக்கிய நிலையில், தற்போது பாமக செய்ததாக மக்களிடம் காட்டிக்கொள்ள முற்பட்டதையே மக்கள் தடுத்ததாக தெரிவித்தார்.
0 coment rios: