
சனி, 15 ஜூன், 2024

வெள்ளி, 14 ஜூன், 2024
நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன் பேட்டி
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே டெக்ஸ்வேலி அருகில் இமயம் புற்று நோயாளிகள் காப்பம் செயல்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்காப்பகம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது. இதுவரை 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறுதி வாழ்க்கையை இங்கு கழித்துள்ளனர். காப்பகத்தின் 18ஆம் ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் இந்திய மருத்துவ சங்க தலைவர் ஆர்.வி.அசோகன் பங்கேற்றார்.
அசோகன் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்திய மருத்துவ சங்கம் மூலம் கடந்த 40, 50 ஆண்டுகளாக ரத்த தானம் தானாக முன்வந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ரத்த வங்கிகளை உருவாக்கினோம். அகில இந்திய அளவில் எத்தனை ரத்த வங்கிகள் உள்ளது என்ற கணக்கு எங்களிடம் இல்லை. கேரளாவில் 7 ரத்த வங்கிகள் உள்ளன. கேரளாவின் தேவையில் 20 விழுக்காட்டை அது பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 4 ரத்த வங்கிகள் உள்ளன.
இந்திய மருத்துவ சங்கம் 1550 கிளைகளைக் கொண்டது. சுமார் 600 கிளைகள் விழிப்புணர்வு மையங்களாகச் செயல்படும் கட்டடங்களைக் கொண்டது. அதுபோல கிளை அளவில் ஒவ்வொரு இடத்திலும் என்ன தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்து செயல்பட முடியும் என்று தெரிவித்தார். மருத்துவம் வணிகமயமாவது குறித்த கேள்விக்கு, 1985ல் இரண்டு நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தது. அன்று சென்னை, கோவை மருத்துவக்கல்லூரிகள் தான் சமூகத்தில் பெரிய மருத்துவமனைகளாக இருந்தன. இன்று இல்லை. அதை விட்டிருக்கக் கூடாது.
கார்ப்பரேட் மருத்துவமனைகளை விட்டிருக்கக் கூடாது. லாபத்திற்காக பங்குதாரர்களைக் கொண்டு நடத்தப்படுவது அப்படித்தான் இருக்கும். அதை கொள்கை அளவில் தடுத்திருக்க வேண்டும். இந்தத் துறையில் லாபம் உண்டாக்கும் நிறுவனங்கள் வரக் கூடாது. வந்திருக்கக் கூடாது. அது தவறு. அதை 1985ல் தடுக்காமல் விட்டுவிட்டனர். அதுபோன்ற மருத்துவமனைகள் சென்னையில்தான் முதலில் வந்தது. அது நாடு பூராவும் இன்று பரவிருக்கிறது. ஆக இதை மருத்துவமனையாக நடத்துவதா, வியாபாரமாகப் பார்ப்பதா என அரசிற்கும் புரியவில்லை.
மற்றொன்று 1993ல் நோயாளிகளை நுகர்வோர் என உச்சநீதிமன்றம் சொன்னது. அது கடைக்காரர் - வாடிக்கையாளர் உறவைப் போல மாற்றி விட்டது. இன்று வரை அது மீளவில்லை. இப்போது அதை திரும்பவும் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு தான் வன்முறை நிகழ்கிறது. அதற்கு முன்பு இல்லை. அதனை சட்டம் போட்டு மாற்ற முடியாது. ஆழமான பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறினார்.
அப்போது, தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் அபுல்ஹசன், இந்த வன்முறையைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டம் வகுத்துள்ளோம். மக்களைச் சென்றடைவதற்கு, அவர்களின் புரிதல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு கிளையிலும் மருத்துவர்கள் - குடிமக்கள், அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனங்களை இணைத்து செயல்படுவோம். சட்டம் போட்டு மட்டும் தடுக்க முடியாது. காவல் துறையினராலும் முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறி வருகிறது. எனவே, மக்கள் - மருத்துவர்கள் இடையே பரஸ்பர புரிதலை உருவாக்கும் மிகப் பெரிய வேலையை செய்யலாம் என தமிழ்நாடு மருத்துவ சங்கம் முடிவெடுத்துள்ளது. ஈரோட்டைப் போல வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதியில் புற்று நோய் இல்லங்கள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அபுல் ஹசன் தனது அறிமுக உரையில், இந்தியாவில் முதல் முதலாக மருத்துவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்ட புற்று நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை மையம் இமயம் காப்பகம். புற்று நோய் என்று சொல்லும்போது சிகிச்சை பலனற்று மரணத்தின் தறுவாயில் கஷ்டப்படுபவர்களுக்காக கட்டப்பட்டது இல்லம். அவர்களது வலிகளை நீக்கி மறுவாழ்விற்காக இக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. உபாதைகள் அதிகம் இல்லாமல் அமைதியாக வாழ்வதற்கு வகை செய்கிறோம் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ சங்க உதவி தலைவர் எம்.சந்திரசேகர், செயலாளர் கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் கௌரி சங்கர், இமயம் காப்பக உதவி தலைவர் கண்ணம்மாள் துரைசாமி, செயலாளர் சுகுமார், நிதி செயலாளர் என்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காப்பாளர் மருத்துவர் வேலவன், அரவிந்த குமார், மேலாளர் சக்திவேல், முருகன், பூங்கொடி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரூடம்
ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் கடந்த 11ம் தேதி காமராஜர் இல்லத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லோரும் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்றும், நடைபயணம் செல்ல வேண்டும், அதிக அளவில் பூத் கமிட்டி அமைக்கப்பட்ட வேண்டும், இளைஞர்களை அதிக அளவில் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும் என பேசினார்கள்.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவர் செல்வப் பெருந்தகை பேசும் போது கூடுதலாக இரண்டு வாரத்தை பேசினார். அதைப்பற்றிய விவாதம், பிரச்சனை முடிந்துவிட்டது. அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சொல்லும் போது அவர் சொன்னதை ஏற்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டாம் என முன்னாள் எம்.பி. ஒருவர் கருத்து சொன்னார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் போது கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பல இடத்தில் மேயர், கவுன்சிலராக இருப்பதற்கு கூட்டணி தான் காரணம். கூட்டணியில் சலசலப்பு இருக்க தான் செய்யும். வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தான் காங்கிரஸ் போட்டியிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் பணியில் பணியாற்றி வருகிறார். பொற்காலம் ஆட்சி என்று சொல்வதற்கு பதிலாக இந்த ஆண்டு நவீனத்திற்கு ஏற்ப ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று சொன்னேன்.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்களாக இருப்பதற்கு காரணம் காமராஜர். அவர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது எத்தனையோ நிதி நெருக்கடி இருக்கும் சூழலிலும் அனைத்து அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. மதிய உணவு தந்த காமராஜருடன் -காலை உணவு தந்த ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு.தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள்.
நான்கு முனை போட்டியில் வாக்குகள் சிதற தான் செய்யும். கடந்த தேர்தலில் மூன்று முனை போட்டி ஏற்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க,பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் போன்றவர்களால் தான் பா.ஜ.க.வுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.தமிழிசை சவுந்தரராஜனை அமித்ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடு இன்றி அவர் தமிழச்சியாக இருப்பதால் இந்த விவகாரத்தில் நான் கண்டிக்கிறேன்.
முஸ்லிம்கள் 25 சதவீதம் பேர் உள்ள நிலையில் ஒருவருக்கு கூட பா.ஜ.க சீட் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது இந்தியாவுக்கு எப்படி பொதுவான அரசாக இருக்க முடியும்.காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி வரவேண்டும்.நீட் தேர்வு குளறுபடி காரணமாக தான் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பம் முதல் நீட் வேண்டாம் என்றார். தற்போது கேட்டால் காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டு வந்தது என்பார்கள். காங்கிரஸ் நீட் தேர்வு கொண்டு வந்த போது மாநிலங்கள் விருப்பத்தின் பேரில் நடந்து கொள்ளலாம் என்று சொன்னது.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப்பருந்தகை, நானும் பிரச்சாரம் செய்வோம்.
நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்றதை வரவேற்கிறேன். நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உடனடியாக எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.காவல்துறையினர் கைது செய்தால் தான் உண்மை என்னவென்று தெரிய வரும்.இன்னும் மோடி தலைமையிலான ஆட்சி 5 மாதங்களில் கலைந்து விடும். இதற்கு பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளே காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
ஈரோட்டில் 10அடி நீளம் உள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் நீர்க்கசிவு துளையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்ததை அவ்வழியாக சென்ற கிருஷ்ணன் என்பவர் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீர்க்கசிவு துளையில் சிக்கிருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்பு மீட்கப்பட்ட மலப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது. பகலில் வாய்க்காலில் மலைப்பாம்பு சிக்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.