ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலையப் பகுதி, பாரியூர், மொடச்சூர், வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோவில், நாகதேவன்பாளையம், குறவன்பாளையம், பழைய பாரியூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம்.

கூகலூர் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைபுதூர், பொன்னாச்சிபுதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், மேவாணி, சென்னிமலைகவுண்டர் புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் விளக்கத்தை ஏற்று அண்ணாமலை போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டு கோள்

அரசின் விளக்கத்தை ஏற்று அண்ணாமலை போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டு கோள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (4ம் தேதி) தலைமையில் நடைபெற்றது. 
இந்த கூட்டத்திற்கு பின், அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு-அவிநாசி திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டப் பணிகளின் நிலை குறித்து தொடர்ந்து, கேட்டறிந்து வருவதுடன், விரைவாக இத்திட்டத்தினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள். ஆட்சியர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திட்ட காலதாமத்திற்கு திமுக அரசு தான் காரணம் வெளியில் செய்திகள் பரப்பப்படுகிறது. திட்டத்தில், 6 நீரேற்று நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

இந்த பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் இடத்தில் நிலத்தை பயன்படுத்தி கொள்ள விவசாயிகளிடம் கேட்டோம். 1,416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இதில் 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம். அந்தப் பணியும் முடிந்து விடும். தற்போது அத்திக்கடவு அவினாசி திட்டம் தயார் நிலையில் உள்ளது. முறைப்படி 1.5 டிஎம்சி கசிவு நீர் கூடுதலாக வரும் பட்சத்தில் தண்ணீர் வந்தவுடன் திறக்கப்படும்.

திமுக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக வருகின்ற 15ம் தேதி தண்ணீர் வந்தவுடன், அதிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு கசிவு நீர் வந்தவுடன் 70 நாட்களில் 1.5 டி.எம்.சி பயன்பட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த திட்டத்தில் 1,045 குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் மேலும் குளங்கள் இணைக்கும் திட்டம் தற்போது இல்லை. அதிகளவிலான குளங்களை இணைக்க தனி திட்டம் தான் கொண்டு வர முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்.

திட்டம் குறித்து உண்மை தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். அரசியல் செய்கிறார் நான் சொல்லவில்லை. திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறி விட்டோம். இதை அவர்கள் புரிந்து கொண்டு வருகின்ற 20ம் தேதி பாஜக நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் பேட்டியின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஈரோட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

ஈரோட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

ஈரோட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று (4ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அத்திக்கடவு-அவிநாசி திட்ட முன்னேற்ற நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (4ம் தேதி) நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டப் பணிகளின் நிலை குறித்து தொடர்ந்து, கேட்டறிந்து வருவதுடன், விரைவாக இத்திட்டத்தினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்களில் 1 முதல் 3 நீரேற்று நிலையங்கள் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிறு தொய்வு ஏற்பட்டதன் காரணமாக பணிகள் சிறு காலதாமதமானது. நீரேற்று நிலையம் 1 முதல் 3 இடையில் உள்ள பட்டா நிலங்களின் வழியாக பிரதான குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கும் முன் நில இழப்பீடு மற்றும் பயிர் இழப்பீடு தொகை வழங்கிய பின் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதால் ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்க இயலவில்லை.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் பல்வேறு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டும் நில உரிமையாளர்கள் முன் வரவில்லை. தொடர்ந்து நில உரிமையாளர்களிடம் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செப்டம்பர் 2022 முதல் குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு ஜனவரி 2023ல் பணிகள் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சோதனை ஓட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

இருப்பினும் பயன்பாடு இல்லாத காரணத்தால் பல்வேறு இணைப்பு குழாய்களில் பழுது ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து, பிற துறைகள் மூலம் கிளைக் குழாய்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்து ஜூன் 2023-ல் 750 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் போதிய உபரி நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் மீண்டும் நவம்பர் 2023-ல் தொடங்கப்பட்டு ஜனவரி 2024-ல் 1045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மார்ச் 2024 முதல் உபரிநீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலவில்லை. மேலும், 30.07.2024 முதல் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் வரத்தொடங்கி, காவேரி ஆற்றில் வெள்ள நீர் வரத்தொடங்கியதால், இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னேற்பாடாக சோதனை ஓட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று உறுதியாக பவானிசாகரில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, தண்ணீர் திறந்து விட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன் 6 நீரேற்று நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் அமைந்தவுடன் உடனடியாக இத்திட்டப்பணியினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் இத்திட்டத்தில் தனி கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் இத்திட்டத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏதேனும் இருப்பின் அந்த பழுதுகளையும் விரைந்து முடிக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பட்டா நிலங்களின் வழியாக செல்லும் அத்திக்கடவு அவிநாசி திட்டக் குழாய்களை இயக்கம் மற்றும் பராமரிப்பு காலங்களில் சென்று ஆய்வு மற்றும் பழுது பார்ப்பதற்கு எதுவாக நில உரிமையாளர்களுக்கு நிரந்தர குத்தகை மூலம் பாதை உரிமை தொகை பெறுவதற்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தற்பொழுது அரசாணை கிடைக்கபெறும் நிலையில் உள்ளது. அரசாணை பெற்றவுடன் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக நில உரிமையாளர்களிடம் பாதை உரிமைக்கான ஒப்பந்தம் இடப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன், இத்திட்டம் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), கண்ணப்பன் (கோபிசெட்டிபாளையம்), நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலைகுமார், செயற்பொறியாளர்கள் நரேந்திரன், சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ரூ.50 லட்சத்தில் ஓடைகள் தூர்வாரும் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்

ஈரோட்டில் ரூ.50 லட்சத்தில் ஓடைகள் தூர்வாரும் பணி: தொடங்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4ம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஓடைகள் தூர்வாரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (4ம் தேதி) தொடங்கி வைத்தார்.
மழைக்காலங்களில் ஓடைகளில் நீர் சீராக செல்வதற்கு ஏதுவாகவும், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு முன்னேற்பாடாக, ஈரோடு மாநகராட்சி, 3 மற்றும் 4ம் மண்டலங்களுக்கு உட்பட்ட, காசிபாளையம் ஓடை 2 கி.மீ நீளத்திற்கும். சேனாதிபதிபாளையம் ஓடை 2 கி.மீ நீளத்திற்கும். சத்யா நகர் ஓடை 2.1 கி.மீ நீளத்திற்கும், சாஸ்திரி நகர் ஓடை 2.2 கி.மீ நீளத்திற்கும் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், தூர்வாரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இப்பணியானது, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்தியன் பப்ளிக் ஸ்கூல், ப்ளூ லீப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகியோரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வின் போது, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், துணை மேயர் வே.செல்வராஜ், மாநகர பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 3 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 59 காவல் ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டு உள்ளார். இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஈரோடு தாலுகா காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் கோவை மதுக்கரைக்கும், ஈரோடு சூரம்பட்டி காவல் ஆய்வாளராக பணியாற்றிய வைரம் கோவை கோவில்பாளையத்துக்கும், பவானி காவல் ஆய்வாளராக பணியாற்றிய தாமோதரன் கோவை மாவட்டம் ஆனைமலைக்கும், புஞ்சை புளியம்பட்டி காவல் ஆய்வாளராக பணியாற்றிய சரவணன் ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோபி மதுவிலக்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய கலையரசி திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவுக்கும், கடத்தூர் காவல் ஆய்வாளராக பணியாற்றிய துரைபாண்டி நீலகிரி சேரம்பாடிக்கும், தாளவாடி காவல் ஆய்வாளர் பணியாற்றிய செல்வன் அன்னூருக்கும், சென்னிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றிய துரைராஜ் நீலகிரி நடுவட்டம் ஆய்வாளராகவும், ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பணியாற்றிய ஜோதிமணி ஊட்டி மதுவிலக்கு பிரிவுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஈரோடு மதுவிலக்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சரஸ்வதி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய திருநாவுக்கரசு பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக, ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய முருகன் கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளராகவும், ஈரோடு டவுன் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிரேமா திருப்பூருக்கும், ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய ராமராஜன் சேலத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், திருப்பூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாகமணி கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், தாராபுரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரவி சித்தோடு காவல் நிலையத்திற்கும், கோத்தகிரி காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஜெயமுருகன் அம்மாபேட்டைக்கும், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய கோமதி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய கவிதா கோபி மது விலக்கு பிரிவுக்கும், கோவை நெகமம் காவல் ஆய்வாளர் ரவி நம்பியூருக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேரம்பாடி காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் புஞ்சைபுளியம்பட்டிக்கும், கோவை ரத்தினபுரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் சென்னிமலைக்கும், பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையன் பவானிக்கும், திருப்பூர் மத்திய கிரைம் காவல் ஆய்வாளர் சிவகாமிராணி ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், சேலம் கொளத்தூர் காவல் ஆய்வாளர் தேவராஜ் பங்களாபுதூருக்கும், குண்டடம் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தாளவாடிக்கும், போத்தனூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோமதி ஈரோடு டவுன் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர், பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய குருசாமி சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளராகவும், கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசிடம் கை நீட்டி பணம் வாங்கி விட்டாரா என சந்தேகம்: அண்ணாமலை

அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசிடம் கை நீட்டி பணம் வாங்கி விட்டாரா என சந்தேகம்: அண்ணாமலை

எனக்கும் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மீதும் ஒரு சந்தேகம் வருகிறது. அவர், கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் அவர் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று ஈரோட்டில் அண்ணாமலை கூறினார். 
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தின ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியின் நிறைவில், பணிகளை முடித்துவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால், இந்த ஆட்சி துவங்கி, 3 ஆண்டுகள் ஆகியும் தினமும் ஒரு காரணம் கூறி தள்ளிப்போடுகிறது. இதுபற்றி, பாஜக சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில் தொடர் கொலை பற்றி சில திமுக அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவை எல்லாம் முன்விரோதம் காரணமாக கொலை செய்து கொண்டனர். இதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் என்கின்றனர். இந்தியாவில் எந்த கொலையாக இருந்தாலும் முன்விரோதம் உட்பட ஏதாவது ஒரு காரணத்தால் தான் நடக்கும். அவ்வாறு தான் 99 சதவீத கொலைகள் நடக்கும்.

1 சதவீத கொலைகள் மட்டுமே ‘பேஷன் கிரைம்’ என கூறப்படும். அதாவது, எந்த காரணமும் இருக்காது, திடீரென நடந்துவிடும். 98, 98 சதவீத கொலைக்கு அடிப்படை காரணம் இருக்கும். தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றுக்கூட கோவையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தினமும் ஒரு ஊரில் ஒரு கொலையாகிறது. எப்போதும் முன்விரோதமும், காரணங்களும் கொலைக்கு இருந்தாலும், ஏன் இப்போது அதிகரித்துள்ளது என பார்க்க வேண்டும்.

இப்போது காவல் துறையின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். 3 மாதத்தில், 6 மாதத்தில் பெயில் வந்துவிடும் என்ற தைரியம். இரு இன்ஸ்பெக்டர், ஒரு ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்ததும், அந்த ஊரில் என்னென்ன கொலைகள் நடந்துள்ளது. பழிக்கு பழி நடக்குமா. ஜாதிய மோதல் நடக்குமா?. வாய்க்கால் தகராறில் நடக்குமா? என தெரியும். அப்படியானால், எதிர் தரப்பில் உள்ளவரை கண்காணிப்பது தான் போலீசின் வேலை.

அவ்வாறு வழக்கு போட வேண்டும். சில கட்டுப்பாட்டுக்காக குண்டர் தடுப்பில் சிறையில் அடைக்க வேண்டும் என தீர்மானிப்பார்கள். இங்கு அடிப்படை காவல் பணிகள் நடக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை. அதற்கான அதிகாரத்தை அரசு அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தினமும் குறைந்த பட்சம், 13 முதல், 14 கொலைகள் தமிழகத்தில் நடக்கிறது. சட்டம் – ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. இதற்கு திமுகவினர் கூறும் காரணம் கேட்டால், சிரிப்பு வருகிறது.

மேகதாது அணை அமைக்க கர்நாடகா முயல்வதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். எனக்கும் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மீதும் ஒரு சந்தேகம் வருகிறது. அவர், கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் அவர் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரா என்று சந்தேகம் வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசு பள்ளி குறித்து திமுக அரசோ, அமைச்சர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதனால்தான் சந்தேகமாக உள்ளது என்கிறேன்.

சிவகுமார், சித்தராமையாவை எதிர்க்கும் தைரியமில்லை. எதிர்த்து அறிக்கைவிடவில்லை. அவர்கள் செய்வது தவறு என தெரிந்தும், வாய் திறந்து பேசவில்லை. கலைஞர் குடும்பத்தார்தான் கர்நாடகாவில் பல ஷோரூம்கள் வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு மால்கள் உள்ளன. கர்நாடகா பற்றி பேசினால், முதலில் நம்ம கடையை உடைப்பார்கள் என திமுக ஐடியா செய்கிறதா?. தற்போது மழை வந்துவிட்டதால், நாம் காவிரி பிரச்னையை பேசவில்லை.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய வியாதி மறதியாகும். காவிரியில் தண்ணீர் வந்ததால், காவிரி பிரச்னையை நாம் மறந்துவிடுவோம். இனி அடுத்த வருஷம் தான் வரும். அதுவரை, மத்திய அரசின் மீது எதையாவது பழி போட்டு, ஓட்டி வருகின்றனர் எனவும் தீரன் சின்னமலை அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து அழைத்துச் சென்ற தலைவர், மூன்று முறை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு, அந்த காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்த தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டவர்.

இவர் சூழ்ச்சியால் தான் முறியடிக்கப்பட்டார். நேர்மையான முறையில் இவரை முறியடிக்க முடியவில்லை. இவரது பெருமையைப் பற்றி தமிழக அரசு பேச வேண்டும் என்பதுடன், தீரன் சின்னமலையின் முழுமையான வரலாற்றை மக்களுக்கு தெரியும் வண்ணம் தமிழக அரசு இவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பேட்டியளித்தார். அப்போது, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நிர்வாகிகள் முருகானந்தம், ஜி.கே.நாகராஜன், வேதானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.
தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம்: அறச்சலூரில் அமைச்சர், ஆட்சியர் மரியாதை

தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம்: அறச்சலூரில் அமைச்சர், ஆட்சியர் மரியாதை

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, வாரிசுதாரர்களை கௌரவித்து 167 பயனாளிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

தீரன் சின்னமலையின் 219வது ஆடிப்பெருக்கு நினைவு நாள் விழாவினை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசின் சார்பில் இவ்விழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு அமைப்பினரும் அவரது புகழ் வணக்கத்தை தீரன் சின்னமலை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில், இன்று (3ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கலைப்பண்பாட்டு துறையின் இசைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் சின்னமலையின் வாரிசுதாரர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இதனையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் இ- பட்டாக்களையும், 10 பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட நத்தம் பட்டாக்களை மீண்டு வழங்குவதற்கான ஆணையினையும், இசைப்பள்ளி சார்பில் 30 பயனாளிகளுக்கு கலை சுடர்மணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை இளமணி, கலை முதுமணி விருதுகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.41 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் மானியமும், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும், ஒரு பயனாளிக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் துவரை செயல் விளக்கமும், ஒரு பயனாளிக்கு ரூ.400 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர்ஸவே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாரிசுதாரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.