வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

ஈரோட்டில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

ஈரோட்டில் இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆண்டு தோறும் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, ஆடி மாதம் நடக்கும். அதன்படி, ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலம் இன்று நடந்தது.
ஈரோடு காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோயிலில் இருந்து 250க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு கள்ளுக்கடைமேடு ஸ்ரீ இராமபக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றடைந்தனர்.

இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் க.கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ரமேஷ், இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி தா.ஜெயமணி, நகர பொதுச்செயலாளர் வே.பூர்ணிமா ஆகியோர் முன் நின்று வழி நடத்தினர். இதில், பொதுமக்கள் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் முதன்முறையாக சண்முகா மருத்துவமனையில் புற்று நோய்க்கான இரண்டாவது அதிநவீன கதிரியக்க இயந்திரம் பொதுமக்களுக்காக அர்ப்பணிப்பு....

சேலத்தில் முதன்முறையாக சண்முகா மருத்துவமனையில் புற்று நோய்க்கான இரண்டாவது அதிநவீன கதிரியக்க இயந்திரம் பொதுமக்களுக்காக அர்ப்பணிப்பு....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் முதன்முறையாக புற்றுநோய் இரண்டாவது அதிநவீன கதிரியக்க இயந்திரம் திறப்பு விழா.. சேலம் சண்முகா மருத்துவமனையில் திறப்பு.....

சேலம் சண்முகா மருத்துவமனை மருத்துவ சிகிச்சையில் அர்ப்பணிப்புடன் கூடிய 30 வருட சேவையில் புற்றுநோய் சிகிச்சையும் உள்ளடக்கி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் முதன் முறையாக இரண்டாவது புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் *( LINAC MACHINE )* புதிதாக திறக்கப்பட்டது. 

சேலம் சண்முகா மருத்துவமனை இயக்குனரும் மருத்துவத் துறையில் சிறந்த சேவை புரிந்து வருபவருமான மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் அவர்கள் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளரும் நடிகருமான அர்ஜுனன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அதிநவீன கதிரியக்க இரண்டாவது சிறப்பு இயந்திர மையத்தை திறந்து வைத்தனர். 

தொடர்ந்து சேலம் சண்முகா மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்கள் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டேன் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் நடராஜன் மற்றும் பழனியாண்டி முதலியார் நினைவு மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் தேவராஜன் ஆகியோரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

அதுமட்டுமல்லாமல் சேலம் சண்முகா மருத்துவமனையின் முதன்மை இயக்குனர் மருத்துவர் பிரபு சங்கர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரசன்னா ஆகியோர் புற்று நோயை தடுக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் முறை குறித்தும் இந்த விழாவில் சிறப்புரையாற்றினர்.
கோலிவுட் திரை உலகில் ஒருபோதும் சிறிய தயாரிப்பாளர்களை நசுக்காதீர்கள். சேலத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ரஞ்சித் உருக்கம்......

கோலிவுட் திரை உலகில் ஒருபோதும் சிறிய தயாரிப்பாளர்களை நசுக்காதீர்கள். சேலத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ரஞ்சித் உருக்கம்......

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சின்ன தயாரிப்பாளர்களை ஒருபோதும் நசுக்காதீர்கள் ; என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புற முதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள் என சேலத்தில் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் பகுதியைச் சார்ந்த தமாக சேலம் மேற்கு மாவட்ட தலைவரும், சிறந்த ஆன்மீகவாதியும் மற்றும் தொழில் அதிபர்களும் ஆன  சுசீந்திரகுமார் மற்றும் ரகுநந்தகுமார் ஆகியோர்களுக்கு சொந்தமான ராஜம் திரையரங்கில் திரைப்படத்தை ரசிகர்களுடன் நடிகர் ரஞ்சித் பார்த்து ரசித்தார். 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், கவுண்டம்பாளையம் திரைப்படம் காதலுக்கு எதிரான படம் அல்ல. நாடக காதலுக்கு எதிரான படம். படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள் படம் பார்க்காமல் பேசாதீர்கள். அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் எனது படத்தை பார்க்க வராதீங்க என்ற அவர், சின்ன தயாரிப்பாளர்களை ஒருபோதும் நசுக்காதீர்கள். அவ்வாறு நசுக்கும் போது எவ்வளவு பொருள் நஷ்டம் ஏற்படுகிறது என்பது அவர்களுக்கு தான் தெரியும். என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புற முதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஞ்சித், படத்தின் பெயரில் ஜாதி எதுவும் இல்லை. தாய்மார்கள் வெறுக்கும் வகையில் ஒருபோதும் நடக்க மாட்டேன். ஊடகங்கள் மாபெரும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்க்க இழிவான காட்சிகளை பதிவு செய்து வருகிறார்கள். சினிமாவில் இது போன்ற காட்சிகளை கட்டுப்படுத்த சென்சார் உள்ளது. ஆனால் சமூக வலைதளங்களை கண்காணிக்க சென்சார் இல்லை. அவரவர் மனசாட்சியே சென்சார். ஆகையால் சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான சூழல் இல்லை இதற்கு கட்டுப்பாடு அவசியம் என்றார். ஆணவ படுகொலை என்பது பெற்றோர்கள் அவர்கள் பிள்ளை மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தின் வெளிப்பாடுதான்.காதலுக்காக பெற்றவர்களை ஏமாற்றாதீர்கள் என்றார்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

இம்மாத இறுதிக்குள் 2.8 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் பேட்டி

இம்மாத இறுதிக்குள் 2.8 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், வித்யா நகர், திண்டல் கிளையில் மஞ்சள் அறவை செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து  கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  கடந்த சில வாரமாக டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் போன்ற பகுதியிலும், தற்போது மேற்கு மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறேன். இன்று (8ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கூட்டுறவு துறையின் உற்பத்தி பொருளான மங்களம் மசாலா பொருட்கள், குடோன்கள் ஏல முறைகளை ஆய்வு செய்தேன்.

இங்கு மஞ்சளை, 3 வகையாக பிரிக்கும், ரூ.1 கோடி மதிப்பிலான இயந்திர செயல்பாட்டை பார்த்தேன். கூட்டுறவு துறை மூலம், உணவு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மாநில அளவில் பொருட்கள் வாங்கும், 1.14 கோடி ரேஷன் கார்டுகள் பயன் பெறுகிறது. இதற்கு தேவையான அரிசியை கொள்முதல் செய்யும் பணியும் உள்ளது.

தற்போது அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை அடுத்து சம்பா சாகுபடி பணிகள் நடக்கும். அறுவடையின் போது நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, நெல்லை கொள்முதல் செய்து, அறவை செய்து தயார்படுத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில், 3.01 லட்சம் பேர் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து தற்போது அவை சரி பார்த்து, 2.8 லட்சம் கார்டு தயார் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

கூட்டுறவு கடன் இந்தாண்டு, 26 முதல் 30 வகையான கடன் வழங்கப்படுகிறது. விவசாய கடன், கறவை மாடு கடன், மகளிர் குழு கடன் அனைவருக்கும் தெரியும். ஆனால் தெரியாத பல கடன்கள் உள்ளன. அதற்கான இலக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் காலாண்டில், 2.78 லட்சம் பேருக்கு, 26,888 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய கடன், 16,500 கோடி ரூபாய், கால்நடைக்கு, 2,500 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய கடனில் இதுவரை, 3.46 லட்சம் பேருக்கு, 3,081 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் வேளாண் கடன் இலக்கு, 1,140 கோடி ரூபாயாகும். அதில், 171 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வருமாண்டில் அதிகமாக கடன் வழங்கப்படும். ஏற்கனவே கடன் பெற்ற விவசாயிகளுடன், புதிய விவசாயிகள், பிற நபர்களுக்கு கடன் வழங்க வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில்தான் மிக அதிகமாக, 380 குடோன்கள் உள்ளன. 20.44 லட்சம் டன் சேமிக்கும் வசதிகள் உள்ளன. தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளன. ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் பருப்பு, பாமாயில் வரத்தில் தாமதமானது. தற்போது விரைவாக பெறப்பட்டு, விரைவாக வழங்கி வருகிறோம்.

தேவைக்கு முன்கூட்டியே பொருட்களை வாங்க, அரசு ஆர்டர் வழங்கி உள்ளது. மாத தேவைக்கு, 20,000 டன் துவரம் பருப்பும், 2.36 கோடி பவுச் பாமாயிலும் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளோம். அடுத்த, 10 நாளில் இப்பிரச்னை தீரும். முழுமையாக தீர, இம்மாத இறுதியாகும். விட்டுப்போன ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் பொருட்கள் முழுமையாக கிடைக்கும்.

தேவை அடிப்படையில், 4,536 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தவிர, சொசைட்டிகள் லாபகரமானதாக செயல்பட தேவையான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். கூட்டுறவு பணியாளர்களுக்கு சம்பளம், காலிப்பணியிடம் நிரப்ப கேட்கின்றனர். ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குதல் போன்றவற்றை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கூட்டுறவில் பல்வேறு கடன் வழங்குவதுடன், கல்வி கடனும் வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சமுதாய நோக்கில் வழங்கப்படும் கடன் என்பதால், இம்மாவட்டத்துக்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் மத்திய அரசு மானியத்தில் தரும் பொருட்களை மட்டுமே, ரேஷனில் வழங்குகின்றனர். தமிழகத்தில் மட்டுமே அவற்றுடன், மாநில அரசால் ராகி உட்பட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல், தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது.

பல நபர்களுக்கு கைரேகை பதிவு பிரச்சினையால், கண் விழி பதிவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு கண் விழி பதிவிலும் பிரச்சினை எழுந்தால், அவர்களது கை ரேகை பதிவை பெற்று பொருள் வழங்கப்படும். மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதர விலை வழங்க கோரி உள்ளனர். இதுபற்றி வேளாண் ஆணையருக்கு தெரிவித்து நடவடிக்கைக்கு யோசனை தெரிவிக்கப்படும். கூட்டுறவு தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி, உறுப்பினர் சரி பார்ப்பு பணிகள் நடக்கிறது.

ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்கும் திட்டத்தில், ஜி.எஸ்.டி., கட்டணம் வருவதால், அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சில சிக்கல்கள் உள்ளதால், அது தொடர்பான துறைகளிடம் பேசி வருகிறோம். தவிர, கூட்டுறவு சார்பில், 62 பொருட்களின் கடந்தாண்டு, கடந்த மாதம், இன்றைய நிலைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது விலையேற்றத்துக்கு தீர்வு காணும் பணியாக அமையும். தற்போது, 16 புதிய பொருட்களை சேர்த்து, அதன் விலைகளையும் கண்காணிக்கிறோம். நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என கூறினார்.

இந்தப் பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கூடுதல் ஆட்சியர் சதீஸ், மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

கவுந்தப்பாடியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.32.14 லட்சம் மோசடி புகார்: வங்கி மேலாளர் உள்பட இருவர் கைது

கவுந்தப்பாடியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.32.14 லட்சம் மோசடி புகார்: வங்கி மேலாளர் உள்பட இருவர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் கொடுத்து வசூலிக்கும் பந்தன் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் சேமிப்பு கணக்கை துவங்கி இருந்தனர். இவ்வாறு சேமிப்பு கணக்கை துவங்கிய வாடிக்கையாளர்களிடம் தனியார் வங்கி ஊழியர்கள் சிலர் மோசடியாக ஆதார் உள்ளிட்ட சில ஆவணங்களை பெற்று வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவர்களின் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கவுந்தப்பாடியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஊழியர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கி மேலாளரான கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், காசாளரான கோபியைச் சேர்ந்த கோகுலபிரியா, வசூல் அலுவலர்களான கவுந்தப்பாடியைச் சேர்ந்த தீபிகா மற்றும் கோபியைச் சேர்ந்த பிரபாகரன், சக்திவேல் ஆகியோர் கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு மார்ச் வரை வங்கி வாடிக்கையர்களான பெண்களிடம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ஆவணங்களை பெற்று வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து, ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளரிடம் அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது கணக்கிலிருந்து முறைகேடு செய்து 65 வாடிக்கையாளரின் கைரேகையை வைத்து மோசடியாக பயன்படுத்தி சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.32.14 லட்சம் பணத்தை மோசடி செய்ததும், வாடிக்கையாளரின் கைரேகையை போலியாக பதிவு செய்து ஆவணங்களை பெற்று தவறாக உபயோகித்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கியின் கோவை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் கவுந்தப்பாடி வங்கியின் வசூல் பிரிவு அதிகாரி சக்திவேல் ஆகியோரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி புகாரில் தொடர்புடைய வங்கி ஊழியர்களான கோகிலப்பிரியா, தீபிகா, பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழையால் சேறும், சகதியுமான ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்

மழையால் சேறும், சகதியுமான ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று (7ம் தேதி) மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து, நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை விடிய விடிய மழை தூறிக் கொண்டு இருந்தது. இதன் காரணமாக, ஈரோடு வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்று சேரும் சகதியுமாக காட்சியளித்தது.
இந்நிலையில், இன்று (8ம் தேதி) காலை காய்கறிகள் வாங்க மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்தனர். அப்போது, மார்க்கெட் சேறும், சகதியுமாக இருந்ததால் அதில் நடக்க முடியாத சூழல் உருவானது. காய்கறி வாங்க வரக்கூடிய வியாபாரிகள், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால், மார்க்கெட்டிற்கு வரும் மக்களின் வரத்தும் குறைந்தது.

மேலும், சேரும் சகதிகளில் வாகனங்களை கொண்டு செல்வதில் திணறினர். மழை பெய்தாலே மார்க்கெட்டில் சேரும் சகதியமாக தொடர்ந்து காட்சியளிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (9ம் தேதி) கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (9ம் தேதி) கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (9ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (9ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம் தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024-25 இலக்கினை அடைய தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.