ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 26வது பொதுக்குழுக் கூட்டம் மழையபாளையத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில், லிகல் மெட்ரோலாஜி சட்டத்தில் உணவு தானிய மூட்டைகள் பேக்கிங்கிற்கு 25 கிலோவுக்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டும் என்று உள்ளதை 100 கிலோவுக்கு குறைவாக இருந்தால் வரி செலுத்திட வேண்டும் என்று மாற்றம் செய்ய கருத்து கேட்பதற்கு ஆட்சபனை தெரிவிக்கப்பட்டது.

பங்குதாரர் சம்பளம் கமிஷன் ஆகியவற்றிற்கு 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை தவிர்க்க வணிக வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 சதவீத மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1-4-2023ம் ஆண்டு முதல் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பில்களின் தொகையை 45 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்ற வருமான வரித்துறை 43பி(எச்) சட்டத்தினால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த சட்டத்தை வணிகர்களுக்கு உதவும் வகையில் மாற்றம் செய்து அமல்படுத்த வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் செயல்பட்டு வந்த வணிக வரித்துறை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்திற்கு மாற்றப்படுவதை வரவேற்கிறோம். அதேசமயத்தில் கொடுமுடி சர்க்கில் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. அதனை கொடுமுடி சர்க்கில் அலுவலகத்தையும் புதிய இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோட்டில் 80 அடி சாலை திட்டப்பணிகளை துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லீஸ்பேட்டை, மூலக்கரை, பெருந்துறை சாலை, பூந்துறை சாலை, ஊத்துக்குளி வழியாக பாசூர் சாலை வரை இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள், விவசாயிகள், தொழில் துறையினர் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த புதிய இணைப்பு சாலையை முதல்வர் துவக்கி வைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் குளிர்பதன கிடங்குகள் மத்திய, மாநில மானியத்துடன் அமைக்கப்பட்டிருந்தாலும் மின்சார கட்டணம் செலுத்தி நடைமுறையில் குளிர்பதன கிடங்குகள் செலுத்த முடியாத நிலை உள்ளது. 10 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்க அரசு குளிர்பதன கிடங்குகள் அமைக்க நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்த நியோ ஐடி பார்க்கினை ஈரோட்டில் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இஎஸ்ஐ செலுத்தும் தொழிலாளர்களுக்கு சரியான மருத்துவ வசதி இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. அதனை பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் ரயில்கள் நின்று செல்லும் நேரத்தை அதிகரித்து, கூடுதலாக இரண்டு நடைமேடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு-கோவைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, ஒரு நாளுக்கு 4 முறை வந்து செல்லுமாறு சேலம்-கோவை விரைவு பாசஞ்சர் ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

தென் மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் கோவை-ஈரோடு வழியாக புதிய ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஈரோடு மாநகரில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் மேடு வரை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்து, இதுவரை பணிகள் துவங்கவில்லை. விரைவில் பணிகளை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, துணை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். இணை செயலாளர் ஜெப்ரி நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் போதை பொருள் விற்ற 17,481 கடைகளுக்கு ரூ.33.81 கோடி அபராதம்: அமைச்சர் மா.சு. தகவல்

தமிழகத்தில் போதை பொருள் விற்ற 17,481 கடைகளுக்கு ரூ.33.81 கோடி அபராதம்: அமைச்சர் மா.சு. தகவல்

போதை பொருட்களை விற்பனை செய்த 17,481 கடைகள் சீல் வைத்ததோடு, ரூ.33.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டம் இன்று (11ம் தேதி) காலை நடந்தது. இதில்,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டம் எனும் மிகவும் பயனுடைய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கமான மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தினை உறுதி படுத்துவதற்காக, நல்ல சமுதாயத்தினை உருவாக்குவதற்காக என்ற இலக்குகளை மையமாக கொண்டு இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- ஈரோட்டில் மிகச் சிறப்பான நோக்கத்துடன் இந்த மாரத்தான் போட்டிகள் நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 150 மாரத்தான்களின் பங்கேற்றுள்ளேன். நேற்று (10ம் தேதி) உதகமண்டலத்தில் விர்சுவல் மாரத்தான் என்ற 21 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 16 கிராமங்களை கடந்து இந்த மாரத்தான் நடைபெற்றது.

ஒவ்வொரு கிராமங்களை கடந்து செல்கின்ற பொழுது மருத்துவ கட்டமைப்பு குறித்து கேட்டறிந்து கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பது, போதை கலாச்சாரத்திற்கு எதிரான இந்த தொடர் ஓட்டமாகும். எனவே இந்த போதை கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதை கலாச்சாரத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியினை ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற உயர்கல்வி மாணவர்களுக்கு போதை கலாச்சாரத்திற்கு எதிராக போதை வஸ்துகளை பயன்படுத்த மாட்டோம், போதை நடமாட்டதைத் தடுப்போம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றார்கள். 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற முதல் உறுதிமொழி என்கின்ற வகையில், காவல்துறையினர் மேற்கொண்ட நஞவடிக்கையினால் இந்நிகழ்விற்கு உலக சாதனை விருது கிடைத்தது. அதேபோல், கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், போதை கலாச்சாரத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இதில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றார்கள். இதேபோல் நாளை (12ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள குறிப்பாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுவரை 8,66,619 கடைகளில் போதை பொருள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 32,404 கடைகளில் போதை பொருட்கள் இருப்பது கண்டறிப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. 2,86,681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20,91,19,478 ஆகும்.

இதில் 17,481 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.33,28,13,200 அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது. தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் 100 சதவீதம் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான தொடர் ஓட்டம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போதை கலாச்சாரத்திற்கு எதிரான இந்த தொடர் ஓட்டமானது, 5 கி.மீ, 10 கி.மீ என இரு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடர் ஓட்டமானது வில்லரசம்பட்டியில் தொடங்கி கனிராவுத்தர் குளம் சென்று மீண்டும் வில்லரசம்பட்டி வந்தடைந்தது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகளை நட்டு வைத்தும், போதை கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு புத்தகத்தினையும் அமைச்சர்கள் முத்துசாமி, சுப்பிரமணியன் வெளியிட்டனர்.


இதனைத் தொடர்ந்து, தொடர் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு 10 கி.மீ பிரிவில் முதல் பரிசாக ரூ.7,000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.3000 மற்றும் கோப்பை மற்றும் 4 முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயங்களையும்ம், 5 கி.மீ பிரிவில் முதல் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் கோப்பை மற்றும் 4 முதல் 8 இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயங்களையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணித்தலைவர் நெல்லை ராஜா, ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க‌.சண்முகவேல், செயலாளர் பொ.இராமசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சேலம் மேற்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11 வது ஆண்டு தொடக்க விழா புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை கட்சியில் இணைத்து வருகின்றனர். சேலம்

சேலம் மேற்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11 வது ஆண்டு தொடக்க விழா புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை கட்சியில் இணைத்து வருகின்றனர். சேலம்

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதியில் தமாகா கட்சிக்கு தீய உறுப்பினர் சேர்க்கை முகாம்...2-வது நாளாகதிரளாக பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை தமாகா கட்சியில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
நேர்மை தூய்மை வாய்மை என்னும் அரசியல் பாடம் சொல்லித் தந்தவர் ஐயா கர்மவீரர் காமராஜர். ஐயா மூப்பனார் ஆகியோர் வழியில் நின்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா ஜிகே வாசன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தும் தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சியின் 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 
தமிழக அரசியலில் நாம் புதிய அத்தியாயத்தை தொடங்கி நமது இயக்கத்தை முன்னெடுத்து நடத்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் கர்மவீரர் காமராஜர் சிலை அருகே இன்றும் நடைபெற்றது. 

புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா கட்சியின் தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சேலம் மேற்கு மாவட்ட தலைவரிடம் வழங்கினர். 
அவர்களை சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் வாழ்த்தி வரவேற்றார்.
அரசியலில் கண்ணியம் நேர்மை நிர்வாகத்தில் ஊழல் நற்ற தூய்மை என காமராஜர் காலத்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ரகு நந்தகுமார் உட்பட மேற்கு தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு பிரிவில் 20 நவீன கட்டணப் படுக்கை அறைகள்: அமைச்சர்கள் திறப்பு

ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு பிரிவில் 20 நவீன கட்டணப் படுக்கை அறைகள்: அமைச்சர்கள் திறப்பு

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்க கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதனை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் வசதி ஏற்கனவே உள்ளது. பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளையே அதிகம் நாடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

இன்று (11ம் தேதி) அரசு மருத்துவமனையின் சேவையினை மேம்படுத்திடும் வகையில் 20 கட்டண படுக்கை அறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை, மதுரைகளில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கட்டண படுக்கைகள் 16 இடங்களில் திறக்க அறிவிக்கப்பட்டது. மற்ற இடங்களிலும் விரைவில் இச்சேவையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 

மிக குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதிகளுடன் அறை அமைந்துள்ளது. அதிகம் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட ஈரோடு, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதில் மொத்தமாக 9,82,334 அழைப்பாணை அனுப்பப்பட்டு 4,19,143 பேர் வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

இதில், 13,089 பேருக்கு புற்று நோய் சந்தேகம் இருந்த போதிலும், 176 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் 3,29,473 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 1,27,011 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 3,039 சந்தேகம் இருந்த நிலையில் 50 பேருக்கு மட்டுமே புற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் புற்று நோய் பாதிப்பு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் 1,021 மருத்துவர் பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட்டது. மேலும், 977 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 986 மருந்தாளுநர் நியமிக்கப்பட உள்ளனர். காலி பணியிடங்களை வெளிப்படையாக அறிவித்து அவர்களின் விருப்பத்தின் பேரில் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. 

மருத்துவர் நியமனத்திற்காக 2,053 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. தேர்வு நடைபெற உள்ளது. முடிவு வெளியானதும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். 1,066 சுகாதார ஆய்வாளர்கள் நியமன வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடம் நிரப்புவதற்கான வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. வழக்குகள் முடிந்ததும் அந்த பணியிடங்களும் நிரப்பப்படும். குழந்தைகள் பிரிவுகளில் குழந்தைகள் பாதுகாப்பிற்கென உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத்  தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர்கள் சுப்பிரமணியன், முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் கட்டிடப்பணிகளுக்காக ரூ.60 லட்சம் மற்றும் தளவாடங்களுக்காக ரூ.36 லட்சம் என மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற 20 கட்டணப் படுக்கைகள் கொண்ட அறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை வே.செல்வராஜ், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநர் (நலப்பணிகள்) சோமசுந்தரம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு: ஈரோட்டில் அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

கடந்த 3 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு: ஈரோட்டில் அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் இன்று (11ம் தேதி) ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் சுப்பிரமணியன், முத்துசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி அமைந்ததும், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3 துணை சுகாதார நிலையங்கள், 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர் குடியிருப்பு, சித்தமருத்துவம், மருத்துவக் குடியிருப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில் ரூ. 15 லட்சம் செலவில் சித்தமருத்துவப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கோபி அரசு மருத்துவமனையில் ரூ. 6.89 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர், சி.டி. ஸ்கேன் போன்ற பல்வேறு வசதிகள் ரூ. 2.96 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பவானி அரசு மருத்துவமனையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை, ரூ. 29.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எட்டு அடுக்கு கொண்ட, ரூ 67.12 கோடி மதிப்பிலான கட்டிடம், ரூ. 11 கோடிக்கு உபகரணங்கள் என ரூ. 78.12 கோடி மதிப்பிலான மருத்துவமனை மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் உலக தரத்துடன் கூடிய 7 அறுவைச் சிகிச்சை அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனைக்கு ரூ. 8.5 கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்து தர பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார். மிக விரைவில் எம்.ஆர்.ஐ. கருவி பொருத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், அரசு மருத்துவ சேவையை பொதுமக்கள் கூடுதலாக பயன்படுத்தி வருகின்றனர். எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. இவ்வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 16 இடங்களில் இது போன்ற கட்டண படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

கோவை, மதுரை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த கட்டண படுக்கை அறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி மருத்துவச் சிகிச்சை பெறும் வகையில், 20 படுக்கை அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண அறைகள் குளிர்சாதன வசதியுடன், தனி கழிப்பறை, குளியலறை வசதி, தொலைக்காட்சி பெட்டி போன்ற வசதிகள் இருக்கும். ஈரோடு படுக்கை அறைக்கான கட்டணம் குறித்து, ஓரிரு நாளில் அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.

அரசு மருத்துவமனையில் கேத் லேப் வசதி ஏற்படுத்த ரூ. 12 கோடி செலவாகும். கோவை, சேலத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஈரோட்டில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால், புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த 4 மாவட்டங்களில் வசிக்கும் 9.82 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, 4.19 லட்சம் பேர் பரிசோதனைக்கு வந்தனர். இதில், புற்றுநோய் இருக்கலாம் என 13 ஆயிரத்து 89 பேர் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 3.29 லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 1.27 லட்சம் பேரை பரிசோதனை செய்ததில், 3039 பேர் புற்றுநோய் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதில், 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னால், 1,021 மருத்துவப் பணியிடங்கள், 927 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட்டன. 986 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளது. 2,253 மருத்துவர் பணியிடங்களுக்கு ஜூலை 15ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது. அதற்கான கேள்விகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்வுக்கு பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுவார்கள். 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் நிரப்புவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்குக்கு தீர்வு கிடைத்தவுடன் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். 2,250 கிராம சுகாதார செவிலியர்கள் நிரப்புவதிலும் வழக்குகள் உள்ளது.வழக்கு முடிந்தவுடன் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். மகப்பேறு உதவித் திட்டம் ரூ. 18 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 5 ஆயிரம் ரூபாய் மத்திய அரசும், ரூ 13 ஆயிரம் மாநில அரசும் தருகிறது. படிப்படியாக தகுதியானவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் 137 பேர் பணியில் உள்ளனர். இவர்களை கூடுதலாக பணியில் அமர்த்துவது குறித்தும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். முதல்வர் காப்பீடு திட்டத்தில் 1,900 மருத்துவமனைகளுக்கு மேல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த மருத்துவமனையிலாவது சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் மாதம் 300 பிரசவம் வரை நடக்கிறது. குழந்தை திருட்டை தடுக்கும் வகையில், இந்த மருத்துவமனையில் இருந்த பல வழிகள் அடைக்கப்பட்டுள்ளது. தவறு நேர்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.

நாமக்கல்லில் கிட்னி விற்பனை தொடர்பான புகாரில் சிக்கியவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்னி விற்பனை தொடர்பான தகவல் இருந்தால் ரகசியமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மேயர் நாகரத்தினம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
ஜியோலைப் அக்வா டெக் நிறுவனம் சார்பில் விஷம் இல்லா வேளாண்மை என்ற தலைப்பில் கலந்துரையாடல்...,

ஜியோலைப் அக்வா டெக் நிறுவனம் சார்பில் விஷம் இல்லா வேளாண்மை என்ற தலைப்பில் கலந்துரையாடல்...,

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

விஷமில்லா வேளாண்மை என்ற தலைப்பில் விவசாய பொருட்கள் விற்பனையாளர்களுக்கான கருத்தரங்கம் சேலத்தை அடுத்துள்ள கந்தாஸ்ரமம் பகுதியில் நடைபெற்றது. 

ஜியோலைப் அக்ரி டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஜியோலைப் நிறுவனத்தின் தேசிய விற்பனை மேலாளர் கிரண்சக்ராப்பு, தேசிய வளர்ச்சி மேலாளர் அருண்குமார் ராய் மற்றும் தென் மண்டல மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஜியோலைப் இன் 50 ஆண்டுகள் விவசாய சேவைகள் விவசாயிகள் இடையே 15 ஆம் ஆண்டு வெற்றி கரமாக வரவேற்பு பெற்ற விகர் தயாரிப்பு புதிய தொழில்நுட்பங்கள், விஷமில்லா வேளாண்மை பற்றியும் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவு பெறுவது எப்படி என்பது பற்றியும் விற்பனையாளர்களிடையே உரையாற்றினர். 
மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக விற்பனை செய்த விற்பனையாளர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ஜியோலைப் நிறுவனத்தின் விஷமில்லா தயாரிக்கப்பட்ட  புதிய தயாரிப்புகள் சிறந்த விற்பனையாளர்களை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் சிறப்பாக விளக்கம் அளித்தனர். 
இந்த நிகழ்ச்சியில் திருச்சி விற்பனை மேலாளர், விழுப்புரம் விற்பனை மேலாளர் மற்றும் கேரள விற்பனை மேலாளர் உட்பட தமிழக முழுவதும் இருந்து வந்திருந்து ஜியோலைப் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் பலரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

சனி, 10 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் நாளை (12ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் நாளை (12ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (12ம் தேதி) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் பிரதான சாலை, ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன்நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யாநகர், முதலிதோட்டம், மல்லிநகர், ஈ.பி.பி.நகர், கந்தையன் தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல்நகர், பொன்னிநகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம்நகர், ரோஜாநகர், அருள்வேலன்நகர் மற்றும் எல்.வி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.