வியாழன், 15 ஆகஸ்ட், 2024

SDCBA சங்கத்தில் 78 வது சுதந்திர தின விழா... சங்க உறுப்பினர்களுக்கு புதிய குற்றவியல் சட்டப் புத்தகங்கள் வழங்கல்..

SDCBA சங்கத்தில் 78 வது சுதந்திர தின விழா... சங்க உறுப்பினர்களுக்கு புதிய குற்றவியல் சட்டப் புத்தகங்கள் வழங்கல்..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

78வது சுதந்திர தின விழா...SDCBA சங்கத்தில் மூவர்ண கொடி ஏற்றி வைக்கப்பட்டு, வழக்கறிஞர்களுக்கு புதிய குற்றவியல் சட்டப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. 

இந்திய திருநாட்டில் 78 வது சுதந்திர தின விழா இந்த நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனை அடுத்து புதிய குற்றவியல் சட்ட புத்தகங்களை சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்களுக்கு விழாவின்போது வழங்கப்பட்டது. இதனை அடுத்து நாட்டுப்பண் முழங்க விழா இனிதே நிறைவு பெற்றது. 
இந்த விழாவில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் என கேரளா கலந்து கொண்டனர்.

புதன், 14 ஆகஸ்ட், 2024

ஈரோடு பஸ் நிலையத்தில் 20 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

ஈரோடு பஸ் நிலையத்தில் 20 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் குளிர் பானம் மற்றும் உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம், கூல்ட்ரிங்க்ஸ் கடை மற்றும் பழச்சாறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, கடைகளில் நடத்துவதற்கான ஆவணங்களை சரிபார்த்ததுடன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு காலாவதியான பொருட்களை விற்கக் கூடாது என்றும் திறந்த வழியில் வைத்து உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், இந்த சோதனையில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு முட்டை பதப்படுத்தும் ஆலையில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் ஆய்வு

ஈரோடு முட்டை பதப்படுத்தும் ஆலையில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் எஸ்.கே.எம். முட்டை பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் அல்கா உபாத்யாயா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் எஸ்.கே.எம். முட்டை பொருட்கள் தயாரிப்புகள் ஏற்றுமதி (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது, தரமான முட்டை பொருட்கள் உற்பத்தி செய்வதில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனம் 20 மில்லியன் டாலர் மதிப்பில் 100 சதவீத ஏற்றுமதி என்ற குறிக்கோளுடன் சிறந்த தயாரிப்பு மூலம் சந்தையில் முதன்மையாகவும், இந்தியா (ம) வெளிநாடுகளில் சிறந்த நிறுவனமாகவும் திகழ்கிறது.

உலகத்தரமான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டும் தரமான தீவனம், விஞ்ஞான ரீதியான சுகாதாரப் பேணல் (ம) பராமரிப்பு முறைகள் மூலம் தரமான முட்டைகளை உற்பத்தி செய்கிறது. மேலும், இந்நிறுவனம் முட்டை பொருட்கள் தயாரிப்பில் முழுமையாக தானியங்கி எந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் முட்டைகளை கையாளும் திறன் கொண்டுள்ளது.

1997ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம் முட்டை பொருட்கள் தயாரிப்பில் ஆசியாவிலேயே பெரிய நிறுவனம் ஆகும். ஒரு ஆண்டுக்கு 7500 டன் முட்டை பவுடர் உற்பத்தி செய்யும் திறனுடன், முட்டை பொருட்கள் ஏற்றுமதில் இந்திய அளவில் 50 சதவீதத்திற்கும் மேல் சந்தை மதிப்பினை கொண்டும், ஜப்பான் நாட்டில் இறக்குமதி மதிப்பில் 10 சதவீதத்திற்கு மேல் பங்கு வகிக்கிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டை பொருட்கள் 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு குறிப்பாக ஜப்பான், ஐரோப்பா, ரஷ்யா, நெதர்லாந்து, ஜெர்மனி, தாய்லாந்து, வியட்நாம், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எஸ்.கே.எம். நிறுவனம் தரத்திற்கான சான்றுகளை ISO, BRC, HALAL, KOSHER & NABL போன்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தில் முழு முட்டை பவுடர், மஞ்சள் கரு பவுடர், வெண்கரு பவுடர், திரவ முட்டை, திரவ மஞ்சள் கரு, திரவ வெண்கரு ஆகிய பொருட்களும் மதிப்புக்கூட்டப்பட்ட திரவ முட்டை (டெட்ரா பேக்), முட்டை வெள்ளை கியூப், முட்டை புரத பவுடர் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் அல்கா உபாத்யாயா தலைமையில், கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் அபிஜித் மித்ரா, கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவப் பணிகள் துறை, இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், இணைச் செயலாளர் ஓ.பி.சௌத்திரி, இணை ஆணையர் எஸ்.கே.துத்தா, உதவி ஆணையர் ஆதிராஜ்மிஸ்ரா, சென்னை கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் சுரேஷ் கிருஸ்டோபர் ஆகியோர் அடங்கிய குழு கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், எஸ்கேஎம் முட்டை பதப்படுத்தும் ஆலையின் செயல்பாடுகள், தயாரிக்கப்படும் பொருட்களின் தரம், ஏற்றுமதி ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு கருத்துகளை கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் வீ.பழனிவேல், ஈரோடு கோழிநோய் ஆராய்ச்சி ஆய்வுக்கூட உதவி இயக்குநர் சக்திவேல், எஸ்கேஎம் மேலாண்மை இயக்குநர் சிவகுமார், செயல் இயக்குநர் சரத்ராம், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் கிருஷ்ணன், தலைமை வழங்கல் அலுவலர் சிவராஜூ, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
தாளவாடி அருகே வியாபாரி போல் நடித்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த போலீசார்

தாளவாடி அருகே வியாபாரி போல் நடித்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த போலீசார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனப்பகுதியில் வனத்துறையினருடன், மாவோயிஸ்ட் கண்காணிப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திங்களூர் அருகே உள்ள பாசக்குட்டை கிராமத்தில் யானை தந்தம் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவோயிஸ்ட் போலீசார் யானை தந்தங்களை வாங்கும் வியாபாரி போல் நடித்து பாசக்குட்டையைச் சேர்ந்த நபரிடம் விலைக்கு தந்தம் கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் வீட்டின் பின்னால் வனப்பகுதியில் சென்று புதைத்து வைத்திருந்த யானை தந்தங்களை எடுத்து வெளியே கொண்டு வந்தார்.

உடனடியாக, மறைந்திருந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாசக்குட்டையைச் சேர்ந்த துரைசாமி (வயது 42) என்பதும், அதே கிராமத்தில் பெட்டிக்கடை மற்றும் இறைச்சி கடை நடத்தி வருவதும், இறந்த யானையின் உடலிருந்து தந்தங்களை திருடியதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, 60 கிலோ எடை கொண்ட ஐந்தரை அடி நீளமுள்ள 2 யானை தந்தத்தை பறிமுதல் செய்த போலீசார், துரைசாமியை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் மருத்துவர் சங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால் ராஜ் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் திட்ட அறிக்கையில் வஞ்சகம் விளைவித்தது, தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு  அலட்சியப்படுத்தியது, சென்னை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு நிதி வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள தமிழ்நாடு ரயில்வே திட்ட பணிகளுக்கு உடனடியாக நீதி ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் நீட் தேர்வு மோசடி நிதிநிலை அறிக்கையில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட துணை செயலாளர் கந்தம்பட்டி குமார், மாநில கலைத்துறை துணை செயலாளர் சுப்பிரமணியன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நடேசன், மாநகர செயலாளர் அருள் மாது மற்றும் கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் வைகோ பாபு உட்பட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

அம்மாபேட்டை அருகே லாரி-மினி பேருந்து மோதிய விபத்தில் 15 பள்ளி சிறுவர்கள் காயம்: 6 பேர் ஈரோடு அரசு மருத்துவமனை அனுமதி

அம்மாபேட்டை அருகே லாரி-மினி பேருந்து மோதிய விபத்தில் 15 பள்ளி சிறுவர்கள் காயம்: 6 பேர் ஈரோடு அரசு மருத்துவமனை அனுமதி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள குருவரெட்டியூரில் இருந்து, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி செல்வதற்காக, தனியார் மினி பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் இன்று (13ம் தேதி) மாலை சென்றது. இதில், குருவரெட்டியூர் அரசு பள்ளி சிறுவர் , சிறுமியர்கள் 15க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

சனிசந்தையில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, கரடிப்பட்டியூர் வழியில் சென்றது. அப்போது, கருங்கரடு பூலேரிக்காடு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கரடிப்பட்டியூர் ஏரியிலிருந்து மண் லோடு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி, மினி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த, 15 பள்ளி சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளித்திருப்பூர் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று, கருங்கரட்டை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் கிருபா (வயது 10), சதீஸ்குமார் மகன் திவித் (வயது 13), மணிகண்டன் மகள் ரித்திகா (வயது 7), விலாமரத்துக்காட்டை சேர்ந்த கந்தசாமி மகன் கோகுல் (வயது 10), ஓலையூரை சேர்ந்த ரங்கன் மகள் ரேணுகாதேவி (வயது 13), ஜிஜி நகரை சேர்ந்த சித்துராஜ் மகன் சச்சின் (வயது 7) மற்றும் மினி பஸ் டிரைவர் செல்வன் (வயது 35) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்ட மற்ற சிறுவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுதந்திர தின விழா ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசியக்கொடி ஏற்று வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளை கௌரவிக்கிறார்.

இதனையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் பிரியா சாய்ஸ்ரீ, காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டன. ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினா். 


மேலும், ஈரோடு வந்த ரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்கி பயணிகளின் உடைமை களை சோதனை செய்தனர். அப்போது பயணிகளிடம் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு வர வேண்டாம் என‌ அறிவுறுத்தினர். 

இதேபோல், ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சோதனைச்சாவடியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.