வியாழன், 15 ஆகஸ்ட், 2024

சேலம் நெய்க்காரப்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கும் இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்... கோரிக்கை முன்வைத்தவர்களை பார்த்து திமுகவை சேர்ந்தவர்களா தாங்கள் என்று அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கேட்டதால் பரபரப்பு...

சேலம் நெய்க்காரப்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கும் இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்... கோரிக்கை முன்வைத்தவர்களை பார்த்து திமுகவை சேர்ந்தவர்களா தாங்கள் என்று அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கேட்டதால் பரபரப்பு...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

78வது சுதந்திர தின விழாவை ஒட்டி நெய்க்காரப்பட்டி கோடி காடு பகுதியில் கிராம சபை கூட்டம்... அங்குள்ள கொட்டனத்தான் ஏரி தூர்வாரி சுத்தம் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கேள்வி எழுப்பிய வரை திமுகவை சார்ந்தவரா தாங்கள் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது கிராம சபை கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சியின் சார்பில் கொண்டலாம்பட்டி அடுத்துள்ள கோடிக்காடு ஏரிக்கரை காளியம்மன் கோவில் திடலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 
நெய்க்காரப்பட்டி ஊராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த பெருமாள் என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் சேலம் தெற்கு வட்டாட்சியர் உட்பட அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது அடிப்படை தேவைகள் குறித்தும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்பொழுது நெய் காரப்பட்டி கோடிக் காடு பகுதியில் உள்ள கொட்டனத்தான் ஏரியில், கழிவு நீர் புகுந்து ஏரி முழுக்க மாசடைந்துள்ளதோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் நீர் மாசடைந்துள்ளதால் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு நோய்த்தொற்று மற்றும் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். 
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் இடம் பலமுறை கோரிக்கை கொடுத்தும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என நெய்க்காரப்பட்டி மக்கள் நல சங்க உறுப்பினர்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கையை முன்வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவை சேர்ந்து நெய்க்காரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் பிரச்சனையை எழுப்பிய இளைஞர்களை பார்த்து இந்த பகுதியைச் சேர்ந்தவரா அல்லது திமுகவைச் சார்ந்தவரா ? என கோரிக்கைகள் குறித்து பேசாமல் கண்மூடித்தனமாக விவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் உன்னை நான் இந்த பகுதியில் பார்த்ததே கிடையாது யார் நீ என்று கேட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சி மன்ற அதிமுகவைச் சேர்ந்த தலைவரிடம், நான் இந்த பகுதியை சேர்ந்தவன் தான் என்றும் என்னிடம் ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது காண்பிக்கவா என்று கேட்டதால், கிராமசபை கூட்டத்தில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை குறித்து பேசப்படாமலேயே கிராம சபை கூட்டம் முடிவுக்கு வந்தது.


பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் எல்.பி.பி. வாய்க்காலின் சீரமைப்பு பணிகளை கண்காணித்து, இப்பணிகளை விரைந்து முடித்திடவும், ஆகஸ்ட் 15ம் தேதியன்று தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை முடித்து, தண்ணீர் திறந்துவிடும் அளவிற்கு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு இன்று (15ம் தேதி) முதல் 12.12.2024 முடிய 120 நாட்களுக்கு 23846.41 மி.க.அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயில் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயில் இரட்டைப்படை மதகுகளுக்கும் தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு, வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்பவானித் திட்ட பிரதானக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீரின் அளவு 200 கன அடி முதல் 2300 கன அடி வரை படிப்படியாக உயர்த்தப்பட்டு 120 நாட்களுக்கு 23.846 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும். இதில் ஈரோடு மாவட்டத்தில் 91,284 ஏக்கர் நிலங்களும், திருப்பூர் மாவட்டம் 10,228 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 1,988 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அணையில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. மழையும் போதிய அளவு இருக்கிறது. எனவே, இந்த தண்ணீர் விவசாயிகளுக்கு சரியான அளவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவு செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூலை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, கண்காணிப்பு பொறியாளர் உதயகுமார் (பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத் துறை), செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, (கீழ்பவானி வடிநிலக் கோட்டம்), அருள் அழகன் (பவானிசாகர் வடிநிலக் கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாதி ரீதியான குறியீடுகளை நீக்கி 1 2 3 என எண்களைக்  கொண்டு பெயர் பலகை அமைத்து தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு.

சாதி ரீதியான குறியீடுகளை நீக்கி 1 2 3 என எண்களைக் கொண்டு பெயர் பலகை அமைத்து தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

பள்ளிப்பட்டி ஊராட்சியில் 9  வார்டுகளில் உள்ள ஜாதி குறியீடுகளை நீக்கி 1,2 மற்றும் 3 என எண்களைக் கொண்டு 9 வார்டுகளுக்கும் பெயர் பலகை அமைத்து தர வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை.

78வது சுதந்திர தினத்தை ஒட்டி சேலம் மாவட்டம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளிப்பட்டி பஞ்சாயத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினார். 
குறிப்பாக பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பவர் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்ஜி என்பவரை அணுகிய போது, சமூக ஆர்வலரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிப்பட்டி கிராம சபை கூட்டத்தில் முகாம் அலுவலர்களிடம் அம்பேத்கர் நகர் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர். 
அந்த மனுவில், பள்ளிப்பட்டி ஊராட்சியில் வாழும் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர் இதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக பொது மக்களுக்கு பொதுக்களிப்பிடம் கட்டித் தரப்பட வேண்டும், பள்ளிப்பட்டி ஊராட்சியில் 9  வார்டுகளில் உள்ள ஜாதி குறியீடுகளை நீக்கி 1,2 மற்றும் 3 என எண்களைக் கொண்டு 9 வார்டுகளுக்கும் பெயர் பலகை அமைத்து தர வேண்டும். 20 ஆண்டு காலமாக பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் வரக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்காத காரணத்தினால் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று குடிநீர் பிடிப்பதால் அங்குள்ளவர்கள் சாதி ரீதியான பாகுபாடுகள் காட்டி வருகின்றனர். இது தங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் எனவே நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும், பள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி வகுப்பறை கட்டிட வசதி விளையாட்டு தளத்துடன் கூடிய பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், பள்ளிப்பட்டி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும், பள்ளிப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த கழிவறை இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. எனவே புதிய கழிவறை கட்டித் தர வேண்டும் மற்றும் செயல் இழந்து காணப்படும் பொது நூலகத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பள்ளிப்பட்டி ஊராட்சியில் தனி கூட்டுறவு சொசைட்டி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் பயன் பெறும் வகையில் புதிதாக தனி கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி முகம் அலுவலர்களிடம் மனு வழங்கப்பட்டது. 
இந்த மனுவினை பெற்றுக் கொண்ட முகாம் அலுவலர்கள் இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை வரும் 17ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை வரும் 17ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் கலக்கும் பவானி ஆற்றின் உபரிநீரை கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என 3 மாவட்ட மக்கள் சுமார் 60 ஆண்டுகளாக போராடி வந்தனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் 2019 டிசம்பர் மாதம் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைகட்டில் இருந்து 1,065 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய் வாயிலாக, நீரை பம்பிங் செய்து எடுத்து சென்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் பவானி ஆற்றில் விடும் வகையில் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

தொடர்ந்து , நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வந்தன. இப்பணிக்கு ரூ.1,961.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 17ம் தேதி, பவானியில் உள்ள நீரேற்று நிலையம்-1ல் இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனால், 3 மாவட்ட மக்களின்‌ 60 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று (14ம் தேதி) இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பர்கூர் தாமரைக்கரை பகுதியில், மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், நேற்று இரவு முதல் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதேபோல் மைசூரில் இருந்து அந்தியூர் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னரே, போக்குவரத்து தொடங்கியது.


78வது சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்

78வது சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்

ஈரோடு அடுத்த 46 - புதூர் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (15ம் தேதி) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட 17 சுதந்திர போராட்ட தியாகிகள், 63 மொழிப்போர் தியாகிகள், 6 எல்லைக் காப்பாளர்கள் என 86 சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். இதனையடுத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த 92 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 31 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 60 ஆயிரத்து 352 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதனையடுத்து, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 பள்ளிகளைச் சார்ந்த 515 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், இணை ஆணையர் (மாநில வரி, ஈரோடு கோட்டம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாரணவீரன், விவேகானந்தன், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட காவல் துறையினர், அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
78வது சுதந்திர தின விழா..SBA தலைவர் விவேகானந்தன் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து மரியாதை.

78வது சுதந்திர தின விழா..SBA தலைவர் விவேகானந்தன் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து மரியாதை.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா. சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உற்சாக கொண்டாட்டம். 

இந்திய திருநாட்டில் 78 வது சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில், சேலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட நீதிபதிகளுக்கும் மூத்த வழக்கறிஞர்களுக்கும் விழாவின் போது கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இந்த விழாவில் சேலம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.