சனி, 31 ஆகஸ்ட், 2024

கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லாமல் பண்ணாரி அம்மன் கோயிலில் இபிஎஸ் வழிபாடு

கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லாமல் பண்ணாரி அம்மன் கோயிலில் இபிஎஸ் வழிபாடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியில் அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலம் மைசூரு, சாம்ராஜ் நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று (31ம் தேதி) சனிக்கிழமை காலை திடீரென பண்ணாரி அம்மன் கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வந்தார். பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு, வந்த எடப்பாடி பழனிசாமியை அங்கிருந்த பணியாளர்கள், பக்தர்கள் என பலரும் சூழ்ந்து கொண்டனர். பின்னர், புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கூட தகவல் சொல்லாமல் திடீரென வந்து பண்ணாரி கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றது ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஈரோடு காவிரிக்கரையில் வரும் 14ம் தேதி பனை விதைகள் நடும் பணி

ஈரோடு காவிரிக்கரையில் வரும் 14ம் தேதி பனை விதைகள் நடும் பணி

தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 2024, ஜூலை 27ம் தேதி ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் துவங்கியது.
நாளை செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுக்க பனை விதைகள் சேகரிப்பும், அவற்றை தொடர்ந்து ,செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக்கிறது.

இதேபோன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இதில் ஒரு இலட்சம் (தன்னார்வலர்கள் மாணவர்கள் / சமூக சேவகர்கள் / தொண்டு நிறுவனங்கள் / சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்) பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர். இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பணி இலகுவாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரோடு மாவட்டம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
புன்செய் புளியம்பட்டி அருகே சேவல்களை வைத்து மெகா சூதாட்டம்: 13 பேர் கைது

புன்செய் புளியம்பட்டி அருகே சேவல்களை வைத்து மெகா சூதாட்டம்: 13 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாரம்பாளையம் முந்திரிமேட்டில் சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 10க்கும் மேற்பட்டோர் கட்டு சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். 

இதில், சத்தியமங்கலம் உத்தண்டியூர் வீரமணிகண்டன் (வயது 33), பவானி எலாமடை அஜித் (வயது 26), சத்தியமங்கலம் பெருமாள் பாளையம் பிரேம் ஆனந்த் (வயது 31), கோவை மாவட்டம் அன்னூர் சசிகுமார் (வயது 30), பவானிசாகர் குடில் நகர் ரமேஷ் (வயது 40), தொப்பம்பாளையம் சுபாஷ் (வயது 24), அவினாசி திருமுருகன்பூண்டி மணிகண்டன் (வயது 26), அன்னூர் பச்சாபாளையம் பிரபாகரன் (வயது 32), கோவை பெருமாள் கோவில் கஞ்சப்பள்ளி யுவராஜ் (வயது 32), திருப்பூர் கணக்கம்பாளையம் சரவணன் (வயது 39), புங்கப்பள்ளி தினகரன் (வயது 25), நம்பியூர் வேமாண்டம்பாளையம் லோகநாதன் (வயது 64), புன்செய் புளியம்பட்டி தோட்ட சாலை ரமேஷ் குமார் (வயது 28) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள், ரூ.97,120 பணம், 11 செல்போன்கள், 5 சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஈரோட்டில் ஏடிஎம்மில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

ஈரோட்டில் ஏடிஎம்மில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர் நேற்று முன்தினம் ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆந்திரா பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவர் தனது ஏடிஎம் கார்டு இயந்திரத்தில் செலுத்தி ரூ.7 ஆயிரம் எடுக்க முயன்றார்.

பின் எண்ணை பதிவு செய்தும் பணம் வரவில்லை. இதனால் அவர் தன்னுடைய ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் இருந்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பணம் எடுப்பதற்காக அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்தார்.

அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.7 ஆயிரம் இருந்தது. பின்னர் பிரபாகரன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு வரவேற்பறையில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் அந்த தொகையை கொடுத்துவிட்டு விவரத்தை கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த பணத்தை முத்துவிடம் ஒப்படைத்தனர். பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த பிரபாகரனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.