திங்கள், 2 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் மொடக்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், மொடக்குறிச்சி மஞ்சக்காட்டுவலசு, நேரு வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவக்குமார் (வயது 22), மஞ்சக்காட்டுவலசு ஒரத்திமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் பிரித்திவிராஜ் (வயது 19), மொடக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த குருநாதன் மகன் கமலக்கண்ணன் (வயது 20), மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி மகன் ராகுல் (வயது 22) ஆகியோர் என்பதும், இதில் பிரித்விராஜ் என்பவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகளை பறி முதல் செய்தனர்.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த கட்டுமாத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதியுதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 10 நபர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிகளையும் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கல்குவாரி உரிமையாளர்களுடன் அதிகாரிகள் சமசரம்: நடவடிக்கை கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

கல்குவாரி உரிமையாளர்களுடன் அதிகாரிகள் சமசரம்: நடவடிக்கை கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

கல்குவாரி உரிமையாளர்களுடன் சமரசம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள் செயல்படுவதற்கான காலக்கெடு முடிந்தும், அதன் உரிமையாளர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதனால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. உதாரணமாக கோபி அருகே பூஞ்சை துரையம்பாளையத்தில் இதேபோல நடைபெற்றது.
வட்டாட்சியர் ஆய்வு செய்து ஸ்டார் புளூமெட்டல் குவாரிக்கு சீல் வைத்து அபராதம் விதித்தது. ஆனால் குவாரி தொடர்ந்து இயங்கியதில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதேபோல பர்கூர் மலையில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். காவல்துறை முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்துள்ளது, மலையை ஒட்டிய பகுதியில் கல்குவாரிக்கு ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால் குவாரி நடத்துவோர் புறம்போக்கு நிலத்தை அபகரித்து இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர், அதற்கு பயன்படுத்தும் கனரக வாகனங்களால் பெஜலிடி, எலச்சிபாளையம், தேவர்மலை, தாமரைக்கரை வழியாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் கூட அவசரமாக செல்ல முடிவதில்லை.

இருசக்கர வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன, எனவே ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உரிமையாளர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழ்ப்புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஈரோட்டில் சொத்தை பறித்துக் கொண்டு அடித்துத் துரத்தியதாக மகன் மீது தாய் புகார்

ஈரோட்டில் சொத்தை பறித்துக் கொண்டு அடித்துத் துரத்தியதாக மகன் மீது தாய் புகார்


ஈரோடு அருகே தாயின் சொத்தை அவருக்குத் தெரியாமல் மகன் அபகரித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு, ரங்கம்பாளையம் அருகே அண்ணா நகரைச் சேர்ந்தவர் அன்னபூரணி. இவருக்கு சொந்தமான 80 ச.மீ இடத்தை தனது மகன் பாலாஜி தனக்குத் தெரியாமல் மோசடியாக பதிவு ஆவணம் எழுதிப் பெற்றுள்ளார். 
அதன் பிறகு தன்னை வீட்டை விட்டு அடித்து துரத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான சொத்தில் தனது மகள் ரேணுகாவுடன் பாதுகாப்பாக வசிக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மனு வாங்கும் கூட்டரங்கின் தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க போராடிய மூதாட்டி அன்னபூரணியின் செயல் பார்த்தவர்களின் அனைவரின் உள்ளத்தையும் வேதனை அடைய செய்தது.
தமுமுகவின் 30வது ஆண்டு துவக்க விழா - ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள்

தமுமுகவின் 30வது ஆண்டு துவக்க விழா - ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 30 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்டத் தலைவர் எ.சித்திக் தலைமையில் கழக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தமுமுக மாவட்ட செயலாளர் எஸ். முகமது லரிப், துணைச் செயலாளர்கள் எம்.சாகுல் அமீர் எம். இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி. சாகுல் அமீது,துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது எஸ்.கே பெருந்துறை பாபு, மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் ஆர். சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்று கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கணவர், மாமனாருடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கணவர், மாமனாருடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அர்த்தனாரி (93). இவர் மகன் சுப்பிரமணி, மருமகள் ராதிகாவுடன் வசித்து வந்தார். அர்த்தனாரிக்கு வீரப்பம்பாளையம் பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலம் அவரது பெயரில் உள்ளது.
இந்நிலையில் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அர்த்தனாரி அழைத்துக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

 இந்நிலையில் நேற்று இரவு சரவணன் அர்த்தனாரி வீட்டில் கற்களை வீசி அவர்களை தகாத வார்த்தையில் பேசி உள்ளார். இதை அடுத்து இன்று காலை ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு அர்த்தநாரி தனது மகன் சுப்பிரமணி மற்றும் ராதிகாவுடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் எஸ்.பி. வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென ராதிகா தான் கொண்டு வந்த வாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி, கணவர் சுப்பிரமணி, மாமனார் அர்த்தனாரி ஆகியோர் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து ராதிகா இடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். 

பின்னர் அவர்கள் மீது தண்ணியை ஊற்றினர். இதனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அர்த்தநாரி மேற்கொண்ட நிலப் பிரச்சினை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே வனப்பகுதியில் 108 ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை

அந்தியூர் அருகே வனப்பகுதியில் 108 ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மொண்டன். இவரது மனைவி சிவம்மா (வயது 32). சிவம்மா நிறைமாத கர்ப்பிணியான இருந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று (1ம் தேதி) மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. 

இதனையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேவர்மலை 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சிவம்மாவை மீட்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அப்போது, பர்கூர் மலைப்பகுதி தாமரை என்ற சென்றபோது, சிவம்மாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுநர் ஜி.கார்த்திக் ராஜா ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அவசர கால மருத்துவ நுட்புணர் வி.சதீஸ் பிரசவம் பார்த்தார். 

இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நுட்புணர் சதீஸ் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ராஜா ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.