திங்கள், 14 அக்டோபர், 2024

மொடக்குறிச்சி அருகே மழைநீர் தேங்கி ரயில்வே நுழைவு பாலத்தில் எம்பி பிரகாஷ் ஆய்வு

மொடக்குறிச்சி அருகே மழைநீர் தேங்கி ரயில்வே நுழைவு பாலத்தில் எம்பி பிரகாஷ் ஆய்வு

மொடக்குறிச்சி அருகே மழைநீர் தேங்கிய ரயில்வே நுழைவு பாலத்தை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கொடுமுடி - ஈரோடு சாலையில் கணபதிபாளையம் நால்ரோடு பகுதியை அடுத்த ஆரியங்காட்டுப்புதூர் ரயில்வே நுழைவு பாலத்தில் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீர் தேங்கி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் தேங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மழை நீர் செல்லும் பாதையில் உள்ள இரண்டு குழாய்களை அப்புறப்படுத்தி விட்டு அதற்கு பதிலாக பெரிய குழாய்கள் பதித்து மழை நீர் தேங்காமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மழைநீர் வடிந்து செல்லும் பகுதியான ஊனாம்பள்ளம், பஞ்சலிங்கபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாவடிப்பாளையம் புதூரில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை நீர் செல்லும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பஞ்சலிங்கபுரம் காவிரி ஆற்றின் கரையில் படித்துறை அமைப்பதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அறிவுறுத்தலின் படி மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளான இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் வடிந்து செல்லும் பாதை அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும், இரண்டு குழாய்கள் மட்டுமே உள்ளதால் மழை நீர் வடிந்து செல்ல தடை ஏற்பட்டிருந்தது. எனவே உடனடியாக மழை நீர் வடிந்து செல்லும் அளவிற்கு பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் , இப்பகுதியில் நிரந்தரமாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேகரன், மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வம்பால் சரவணன், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தேவி சிதம்பரம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், ஞானசுப்பிரமணியம், அப்பு (எ) பழனிசாமி, திமுக நிர்வாகிகள், பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் வில் மணி, செந்தில் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்
புஷ்பா பட பாணியில் அந்தியூரில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 1,550 கிலோ குட்கா

புஷ்பா பட பாணியில் அந்தியூரில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 1,550 கிலோ குட்கா

அந்தியூரில் புஷ்பா திரைப்படப் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்துக் கடத்தி வரப்பட்ட 1,550 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் ரவுண்டானாவில் இன்று (14ம் தேதி) காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஒன்று நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை அந்தியூர் - அத்தாணி சாலையில் தோப்பூரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், வாகனத்தில் சரக்குகள் ஏதும் இல்லாத நிலையில், உடனே ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து, போலீசார் சந்தேகமடைந்து சோதனை செய்ததில், புஷ்பா திரைப்பட பாணியில் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னால் சிறிய ரகசிய வழி இருந்ததையடுத்து, அதில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சிறிய அறையில் 148 மூட்டைகளில் ரூ.9 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள 1,544.760 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் சரக்கு வாகனத்தையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த சரக்கு எங்கிருந்து வந்தது? குட்கா கடத்தியவர்கள் யார்? என்பது இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர் வட்டத்தில் அக்.,16ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நம்பியூர் வட்டத்தில் அக்.,16ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நம்பியூர் வட்டத்தில் வரும் 16ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டத்தில் வருகிற 16ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மறுநாள் 17ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 16ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறப்பட உள்ளது.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஈரோடு திண்டல், வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்க உள்ளது. இந்த முகாமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்களான RELIANCE JIO INFOCOMM LIMITED, STRATEGI AUTOMATION, COGENT, DIGITAL INSTRUMENTATION AND CONTROL SYSTEMS, BRITANNIA, AUTOZERV, CAVINCARE, SRI SAKTHI SUGARS, ZENCORP TECHNO SOLUTIONS, URD MOTORS, MILKY MIST, HDFC LIFE INSURANCE, ASM DAIRY AND MILK PRODUCTS, SKM FEEDS, WHEELS INDIA LIMITED, EQUITAS SMALL FINANCE BANK உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

கூடுதல் விவரங்களுக்கு 8675412356, 9499055942 என்ற எண்களின் வாயிலாகவோ அல்லது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த ஈரோடு ஆட்சியர்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த ஈரோடு ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (14ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 215 மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.


பின்னர், பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனிப்பிரிவு, அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் உருவான திடீர் அருவிகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால் மலைப்பாதை சாலையில் மண் சரிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தொடர் மழையால் வனக்குட்டைகள் நிரம்பியுள்ளன. இதனால், காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேலென காணப்படுகிறது. இதுதவிர பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை உள்பட இடங்களில் சிறிய அளவில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. 

இவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்த அருவிகளை அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் படம் மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை: 24 மணி நேரத்தில் 207.80 மி.மீ., பதிவு

ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை: 24 மணி நேரத்தில் 207.80 மி.மீ., பதிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த அக்.7ம் தேதி சாரலுடன் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து சீரான இடைவெளியில் அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 1 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது.மாலை 4 மணி முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.

இதைத்தொடர்ந்து 7வது நாளாக நேற்று (13ம் தேதி) காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு மழை பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு இரவு வரை பெய்து கொண்டே இருந்தது. இதில், அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 36.20 மி.மீ மழை பெய்தது. இதேபோல், மாவட்டத்தில் சராசரியாக 12.22 மி.மீ மழையும், மொத்தமாக 207.80 மி.மீ மழையும் பதிவானது.

மாவட்டத்தில் நேற்று (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (14ம் தேதி) திங்கட்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம்:- 

ஈரோடு - 0.30 மி.மீ., 

மொடக்குறிச்சி - 27.20 மி.மீ.,

கொடுமுடி - 4 மி.மீ.,

பெருந்துறை - 13 மி.மீ.,

சென்னிமலை - 12 மி.மீ.,

கவுந்தப்பாடி - 13.40 மி.மீ., 

அம்மாபேட்டை - 14 மி.மீ.,

வரட்டுப்பள்ளம் அணை - 36.20 மி.மீ.,

கோபிசெட்டிபாளையம் - 3.20 மி.மீ.,

எலந்தகுட்டைமேடு - 4.20 மி.மீ.,

கொடிவேரி அணை - 7 மி.மீ.,

குண்டேரிப்பள்ளம் அணை - 2.70 மி.மீ.,

நம்பியூர் - நம்பியூர் - 8 மி.மீ.,

சத்தியமங்கலம் - 32 மி.மீ.,

பவானிசாகர் அணை - 6.60 மி.மீ.,

தாளவாடி - 24 மி.மீ., மழை பெய்தது.