திங்கள், 24 பிப்ரவரி, 2025

ஈரோடு: அத்தாணி அருகே வன ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி; சட்டவிரோதமாக மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்

ஈரோடு: அத்தாணி அருகே வன ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி; சட்டவிரோதமாக மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகம் அத்தாணி கிழக்கு பாரஸ்ட் பீட், வனக்கோம்பை வனப்பகுதியில் தண்ணீர்பள்ளம் ஏரியில், நேற்று காலை ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து, வனத்துறையினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், அத்தாணி அடுத்த செம்புளிச்சாம்பாளையம் மலையூர் அம்மன் கோவில் அருகே உள்ள பகுதியை சேர்ந்த தொழிலாளி குருசாமி (வயது 38) என்பதும், சம்பவத்தன்று இவர் மீன் பிடிப்பதற்காக அத்தாணி தண்ணீர்பள்ளம் வரக்கோம்பை ஏரிக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில், ஏரியில் ஏற்கனவே அவர் விரித்திருந்த வலையில் சிக்கிய மீன் பிடித்த போது, அவருடைய கால்கள் எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கி கொண்டது. அப்போது, மதுபோதையில் இருந்ததால் இருந்து அவரால் மீண்டு வரமுடியவில்லை. மேலும், அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் குருசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனத்துறையினருக்கு தெரியாமல் ஏரியில் மீன் பிடித்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானியில் ஒரே இரவில் 3 இடங்களில் ரூ.78 ஆயிரம் பணம் திருட்டு

பவானியில் ஒரே இரவில் 3 இடங்களில் ரூ.78 ஆயிரம் பணம் திருட்டு

ஈரோடு மாவட்டம் பவானி காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மனோ. நேற்று முன்தினம் செல்வராஜ் மனைவியை அழைத்துக்கொண்டு காசிக்கு சென்றுவிட்டார். மனோ வீட்டின் மாடி அறையில் படுத்து தூங்கினார்.

இந்தநிலையில், நேற்று காலை மனோ மாடியில் இருந்து கீழே வந்து பார்த்தார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல், பவானி மேட்டூர் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.7 ஆயிரமும், அருகே உள்ள மற்றொரு டீக்கடையில் ரூபாய் ஆயிரத்தையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 இடங்களிலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஈரோடு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஈரோடு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு மரப்பாலம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த ஷேக் அலாவுதீன் மகன் ஷேக் சதாம் உசேன் (வயது 24). கூலித்தொழிலாளியான இவர், ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு, ஷேக் சதாம் உசேன், சிறுமியின் வீட்டுக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி ஷேக் சதாம் உசேன், சிறுமியுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் வீட்டிற்கு வர, உடனடியாக ஷேக் சதாம் உசேன், அவரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ஷேக் சதாம் உசேன் தனது இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்தி சென்று, அவருக்கு தெரிந்தவர் வீட்டில் வைத்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியை காணாமல் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இதனிடையே சிறுமியை ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் இறக்கி விட்டுவிட்டு ஷேக் சதாம் உசேன் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஷேக் சதாம் உசேனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கை நீதிபதி சொர்ணகுமார் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 6 மாதம் சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்ததுடன், இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.

மேலும், அபராத தொகை ரூ.6 ஆயிரம் செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.