வியாழன், 10 ஏப்ரல், 2025

அந்தியூர் அருகே பர்கூர் கத்திரிமலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்து சென்ற ஈரோடு ஆட்சியா்!

அந்தியூர் அருகே பர்கூர் கத்திரிமலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்து சென்ற ஈரோடு ஆட்சியா்!

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கத்திரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்து சென்றார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,060 மீட்டர் உயரத்தில் கத்திரிமலை மலை அமைந்துள்ளது.

இந்த மலை உச்சியில் மலையம்பட்டி, மாதம்பட்டி என இரு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 76 குடும்பத்தினர் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு செல்ல வேண்டும் என்றால் 2 வழிகள் உண்டு. அந்தியூரில் இருந்து பர்கூர், சோளகணை வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் காட்டுக்குள் பயணிக்க வேண்டும். அடர்ந்த காடு, 2 மலைகளை ஏறி இறங்கி செல்வதென்றால் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

அதே நேரம், சேலம் மாவட்டம் கொளத்தூர் வழியாக கத்திரிப்பட்டி கிராமத்துக்கு (சேலம் மாவட்ட எல்லை) சென்று அங்கிருந்து சென்றால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் கத்திரிமலை உச்சியை அடைந்து விடலாம்.

இருந்தாலும் கத்திரிப்பட்டியில் இருந்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் மழை இல்லாத காலங்களில் 5 கி.மீ தூரம் மட்டும் கரடுமுரடான மண் சாலையில் பிக்கப் வேன், ஜீப், சிறிய வகை டிராக்டரில் சென்று, பின் மலைப்பாதையில் 3 கி.மீ தூரம் நடந்தே செல்ல வேண்டும்.

இந்த நிலையில், கத்திரிமலையில் நேற்று முன்தினம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கலந்து கொள்வதற்காக கத்திரிபட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து கத்திரிமலை செல்ல டிராக்டரில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பயணம் செய்தார். 

பின்னர், உயரமான மலைக்கு மண் பெரிய பாறை, கற்கள் உள்ள வழித்தடத்தில் 3 கி.மீ தூரம் நடந்து சென்று பழங்குடியினர் குக்கிராமத்தில் கிராமத்தை அடைந்தார். இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மக்களின் நீண்ட கால குறைகளை கேட்டறிந்தார்.

வழக்கமாக இங்கு திட்டப்பணி பெரிய அளவிலான ஆய்வுக்கு மட்டும் துறை அதிகாரிகள், வனத்துறையினர் செல்லும் நிலையில், தற்போது, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட குழுவினர் மொத்தமாக சென்று மனுநீதி நாள் முகாமும் நடத்தி, மக்களின் நீண்ட கால கோரிக்கை, குறை கேட்டறிந்து இருப்பது பழங்குடியின மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணிக்கு குடிபோதையில் வந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்!

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணிக்கு குடிபோதையில் வந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்!

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணிக்கு குடிபோதையில் வந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 ஏட்டுகள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோருக்கு கோவில் நுழைவாயில் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு பணிக்கு வர வேண்டும். ஆனால், அவர்கள் அதிகாலை 3 மணிக்கு சீருடையுடன் வாகனம் நிறுத்துமிடம் இடத்துக்கு காரில் வந்தனர்.

அப்போது, அங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது, அந்த காரை நிறுத்தி பார்வையிட்டார். அப்போது, காரில் இருந்த 2 பேரும் போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு குண்டம் விழாவில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்ததும், அந்த பணியில் ஈடுபடாமல் குடிபோதையில் காரில் சுற்றி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீஸ் ஏட்டுகள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோரை போலீசார் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, 2 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில், குடிபோதையில் பாதுகாப்பு பணிக்கு வந்ததாக போலீஸ் ஏட்டுகள் சுரேஷ், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தர விட்டார்.
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி!

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கவர்னர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நியாயமான தீர்ப்பை அளித்து உள்ளது.

மாநில அரசு எப்படி பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பால் மற்ற மாநிலங்களும் பயனடையும். தமிழக அரசின் சிறந்த செயல்பாட்டுக்கு இந்த தீர்ப்பு சான்றாக அமைகிறது.

தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்ததற்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுத்தது போல தமிழகத்துக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறோம். மத்திய அரசை எதிர்த்து போராடுகிறோம்.

நீட் தேர்வு விலக்கில் ரகசியம் ஒன்றும் இல்லை. தேர்வு வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்று ஆதரவாக செயல்பட வேண்டும்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. சட்டசபையில் பேசும் அனைவரது பேச்சும் ஒலிபரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரம் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரம் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியான பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடக, கேரளா, சிக்கிம் உள்பட பல்வேறு மாநில பக்தர்கள் உள்பட லட்சக்கணக்கான கலந்து கொண்டு குண்டம் இறங்கி, அம்மனை தரிசனம் செய்து விட்டு, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி சென்றனர்.

இந்த நிலையில், குண்டம் திருவிழாவை தொடர்ந்து துணை ஆணையர் மேனகா தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், உதவி ஆணையர் சுகுமார், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர், சங்கர கோமதி மற்றும் அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, தங்கவேல், அமுதா, பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து என்னும் பணி நடைபெற்றது.

இதில், மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும், தங்கம் 217 கிராம், வெள்ளி 839 கிராம் நகைகளை பக்தர்கள் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தினர். இந்த உண்டியல்கள் திறந்து பணம் என்னும் பணிகளில் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

புதன், 9 ஏப்ரல், 2025

கந்துவட்டி கேட்டு மிரட்டல்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா!

கந்துவட்டி கேட்டு மிரட்டல்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா!

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கூத்தம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பண்டாரப்பன் (வயது 36). பொம்மை வியாபாரியான இவர் நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அவர் தனது குடும்பத்துடன் வந்தார்.
அப்போது, அவர் திடீரென குடும்பத்தினருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசாரிடம் பண்டாரப்பன் கூறியதாவது, நானும், எனது சகோதரர்களும் சேர்ந்து ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தோம். அதற்கு வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி கொடுத்தோம்.

ஆனால், மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வட்டியாக கொடுக்க வேண்டும் என்று அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி புகார் மனு கொடுத்தேன்.

அதன்பேரில், அறச்சலூர் போலீஸ்காரர் ஒருவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் கந்துவட்டி கேட்டு மிரட்டுபவரிடம் விசாரணை நடத்த அழைத்து சென்றார். ஆனால், போலீஸ்காரர் முன்னிலையிலேயே அவர்கள் எங்களை சரமாரியாக தாக்கினர்.

எனவே, எங்களை தாக்கியவர்கள் மீதும், கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்: தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்: தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்!

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். இதில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தெளிவாக தெரியும்படி எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அதன்பிறகு, அவரவர் விரும்பும் மொழிகளில் பெயர் பலகை அமைக்கலாம். எனவே கடைகள், உணவு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு, வணிக சங்கங்களை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை: பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது கைவரிசை!

மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை: பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது கைவரிசை!

மொடக்குறிச்சி அருகே குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் பொன்னம்பாளையம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 6ம் தேதி அதிகாலை சென்றனர்.

பின்னர், சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் (64) என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து குமார் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.