வெள்ளி, 23 மே, 2025

பல்லடம் அருகே மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை-பொதுமக்கள் அவதி...

பல்லடம் அருகே மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை-பொதுமக்கள் அவதி...

 
 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொங்கலூர் ஊராட்சி அய்யப்பா நகர் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் 15 வது மத்திய நிதிக்குழு மானியத்தில் சுமார் 21 லட்சம் ரூபாய் செலவில் தேவனம்பாளையம் சாலை முதல் ஐயப்பா நகர் வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.ஐயப்பா நகர் பகுதியில் 3 சாலைகள் இணையும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றாமலேயே புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடுரோட்டில் மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊராட்சி சாலை என்பதால் வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் உயிர்பலி வாங்க நடுரோட்டில் மின்கம்பம் அமைந்துள்ளதாகவும், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் வரும்போது ஒருவழிச்சாலை என்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை பற்றி யோசிக்காமல் இதுபோன்று ஒப்பந்ததாரர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றசாட்டு தெரிவிக்கின்றனர்.