வெள்ளி, 9 செப்டம்பர், 2022

2-ம் எலிசபெத் காலமானார்; 70 ஆண்டுகாலம் ஆட்சி; மக்கள் கண்ணீர் அஞ்சலி

இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலமாக மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 96. ராணி 2-ம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி. 1926 ஏப்ரல் 21-ம் தேதி பிறந்த எலிசபெத் 1952 பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக 2-ம் எலிசபெத் செயல்பட்டு வந்தார். இவர் இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார். ராணி 2-ம் எலிசபெத் இங்கிலாந்து பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு வகித்தார். ஒவ்வொரு முறை இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்போது அதில் ராணி 2-ம் எலிசபெத்தின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பிலிப் – எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், மரணமடைந்த ராணி 2-ம் எலிசபெத் இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னர் சார்லஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தனது அன்பிற்குரிய தாய் ராணி எலிசபெத்தின் மரணம் தனக்கும் குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் சோகம் என்றும் அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராணி எலிசபெத்தின் உடல் எடின்பர்கில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், பின்னர் லண்டன் பக்கிங்காம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு 10-வது நாளில் அடக்கம் செய்யப்படும்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: