சனி, 19 நவம்பர், 2022

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஊழியர்கள் – கவலை இல்லை என்று எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார். டுவிட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கையில் மாறுதல்களை செய்தார். ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது. இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக்கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை ‘கெடு’ விதித்தார். ‘கெடு’ முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கொத்து கொத்தாக விலகி வருகிறார்கள். டுவிட்டரிலேயே ‘குட் பை’ எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்குக்கு ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க், ”சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் நான் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்” என்று பதில் அளித்துள்ளார். டுவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்தார். ‘கெடு’ முடிந்தபோது, முக்கியமான ஊழியர்களாக கருதப்பட்ட சிலருடன் எலான் மஸ்க் அவசர ஆலோசனை நடத்தினார். சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் சிலர் நேரடியாகவும், வேறு சிலர் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர். அவர்களை தக்கவைக்க முயற்சி நடந்தது. ‘ ‘எப்படி வெற்றி பெறுவது என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புகிறவர்கள் மட்டும் என்னுடன் சேருங்கள்” என்றும் எலான் மஸ்க் கூறினார். இதற்கிடையே, உலகம் முழுவதும் ‘டுவிட்டர்’ அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: