திங்கள், 21 நவம்பர், 2022

பருவதமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் – வனத்துறை அறிவிப்பு

கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் ஸ்ரீபிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு பவுர்ணமி நாட்களிலும், பிறநாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற கடலாடி போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் கட்டாயமாக அடுத்த முறை வரும் போது ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். மாலை 3 மணிக்கு பிறகு மலையேற செல்லும் பக்தர்களை பச்சையம்மன் கோவிலோடு தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறியதாவது:- பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் பத்திரமாக வரவேண்டும் என்பதற்காக நேர கட்டுப்பாடு மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுடன் ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதாலும், கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதாலும் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் மலை ஏறினால் மீண்டும் இறங்குவதற்கு நேரம் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் மழைக்காலம் என்பதால் பாறைகள் வழுக்கும். இந்த பிரச்சினைகளால் மலையேறும் பக்தர்களுக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் உடனடியாக அவர்களை மீட்டு கொண்டு வர முடியாது. இந்த சிக்கல்கள் வேண்டாம் என்பதற்காகவும், மேலும் ஏற்கனவே உள்ள நேர கட்டுப்பாட்டு விதிகளை கொஞ்சம் தளர்வு செய்யப்பட்டு இருந்ததாலும் பக்தர்கள் நேரம் அறியாமல் மேலே சென்று வந்தனர். ஆனால் குறிப்பாக அரசு விதிகளுக்கு உட்பட்டு காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு. இப்படி செல்லும் பக்தர்கள் இரவுக்குள் வந்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இனிவரும் பக்தர்கள் இந்த நேரத்தை கடைபிடித்து வர வேண்டும். இதுகுறித்து நோட்டீஸ் அடித்தும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் ஏதும் நேர கட்டுப்பாட்டை இன்னும் பக்தர்களுக்கு விதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், ‘கடந்த மாதம் பவுர்ணமி தினத்தன்று பருவதமலை ஏறும் பக்தர்களில் சென்னையை சேர்ந்த சிலர் கஞ்சா பொட்டலங்களுடன் சென்றதால் போலீசார் அதிர்ச்சி அடைந்து இதை கட்டுப்படுத்துவது எப்படி என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம் என்று கூறினோம். கடந்த 4 நாட்களாக மலையை சுற்றிலும் இரவு நேரத்தில் ரோந்து வந்து தற்போது மலை ஏறும் இடங்களில் கேமராக்கள் வைக்க சொல்லி கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் செய்யும் இடம் முதல் மலையேறும் வரை பக்தர்களை கண்காணிப்பதற்கு கேமராக்களை பொருத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: