சித்தோடு அருகே வடமாநில டிரைவரைத் தாக்கி காரைக் கடத்தி, பணம் கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், அக்வாரியைச் சேர்ந்தவர் காந்திலால் மகன் விகாஸ் (எ) விக்ரம் (42). கடந்த 3 வருடங்களாக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சுந்தரகிரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரைத் தொடர்பு கொண்ட நெல்லூரைச் சேர்ந்த பாரத் ஜெயின், கோவையில் உள்ள தனது தங்கையை காரில் சென்று அழைத்து வர வேண்டும் என்று கூறி கடந்த 20-தேதி காரைக் கொடுத்துள்ளார்.
அந்தக் காரில் புறப்பட்ட விகாஸ், 21-ம் தேதி அதிகாலை சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பவானியை அடுத்த லட்சுமி நகர், காவிரி ஆற்று பாலம் அருகே சென்றபோது, வேனில் வந்த கும்பல் இரும்பு பைப்பை கொண்டு கார் கண்ணாடிகளை உடைத்ததோடு, விகாஸை இறக்கிவிட்டு காரைக் கடத்திச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சித்தோடு போலீசார் நேற்று அதிகாலை 2 மணி அளவில் லட்சுமி நகர், கந்தசாமி மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற பொலிரோ பிக்அப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், வாகனத்தின் எண் போலியாக இருந்ததும், வாகனத்துக்குள் அறிவாள், பட்டாக்கத்தி, இரும்பு பைப்புகள், உருட்டு கட்டை, மிளகாய் பொடி மற்றும் ரொக்கம் ரூ.20,000, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத்தில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியபோது, பின்னால் காரில் வந்த கும்பல் தப்பியோடியது.
விசாரணையில், கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பியோபாடி, முண்டகள்ளி ஹவுஸ், தங்கப்பன் மகன் ஜெயன் (45), முண்டூர், நச்சுப்புள்ளி, கொட்டுப்பாரா ஹவுஸ், சந்திரன் மகன் சந்தோஷ் (39), பாலக்காடு, நாபுள்ளிபுரா, மலுவஞ்சேரி ஹவுஸ், ஜார்ஜ் மகன் டைட்டஸ் (33), பூலாம்பட்ட கிராமம், குண்ராமி ஹவுஸ், அய்யப்பன் மகன் விபுல் (எ) சந்தோஷ் (31), பாலக்காடு, அச்சம்பாரா, ஹம்பாடதி ஹவுஸ், ஹம்ஸா மகன் முஜீப் ரகுமான் (37), கரிம்பா, காஞ்சிராம், அப்துல் ரகுமான் மகன் முஜீர் ரஹ்மான் (45) என்பதும், கடந்த 21-ம் தேதி சித்தோடு லட்சுமி நகர் அருகே காரைக் கடத்தி பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கோடாளி ஸ்ரீதர், சசிபோஸ், ராகுல், ஸ்ரீகாந்த் மற்றும் அடையாளம் தெரியாத நபர் உட்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
0 coment rios: