ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,08,869 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,443 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 8474 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
* திமுக கூட்டணி: 1,08,869
* அதிமுக கூட்டணி: 43,443
* நாம் தமிழர் கட்சி: 8,474
* தேமுதிக: 1,177
அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டை தக்க வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை ஒரு வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் மட்டுமே அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஜனநாயகத்திற்குப் பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு விமர்சித்துள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்திற்கு பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்று விட்டது என்று தெரிவித்துவிட்டு காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகிழ்ச்சி: “இந்த இடைத்தேர்தல் வெற்றி, முதல்வர் ஸ்டாலினையே சேரும். அவரது தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக உள்ளது” என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் பேட்டி முழுமையாக இங்கே > இந்த வெற்றி முதல்வரைச் சேரும் | ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பதில் பெருமை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதனிடையே, ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி அடைந்ததால், அவருக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், 82 ஆயிரத்து 138 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர், மொத்த வாக்குப்பதிவு 74.79%.
0 coment rios: