வெள்ளி, 3 மார்ச், 2023

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி்க்கு கடந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்கு எண்ணிக்கையின் 15-வது சுற்று முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இமாலய வெற்றி பெற்றார். 2-வது இடத்தை பிடித்த கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்று இருந்தார். இதன் மூலம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார். 

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இளங்கோவனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, தங்கம் தென்னரசு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் காங்.நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்-அமைச்சரை சந்தித்த பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்,

நான் எம்.எல்.ஏ.ஆக பதவியேற்பது எப்போது என்பதை சபாநாயகர் அறிவிப்பார், வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் சுமூகமாக நடந்தது, நியாயமாக நடந்தது என தென்னரசு சொல்லியிருந்தார், ஆனால் தோல்வியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்த மாதிரி தென்னரசு குற்றம்சாட்டுகிறார் என பேட்டி அளித்தார்.

#chennai 


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: