வெள்ளி, 30 ஜூன், 2023

ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ..!


உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்ராகிம் அலை-யின் தியாகத்தை போற்றும் வகையில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை தியாகத்திருநாளாக கொண்டாடுகிறார்கள். அதன்படி ஈரோட்டில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை பிரமாண்டமாக நடந்தது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமை தாங்கி தொழுகையை வழிநடத்தினார்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா பேசுகையில் ...

இறைவன் மனித குலத்துக்கு எத்தனையோ கடமைகளை தந்திருக்கிறார். கட்டளைகளை சொல்லி இருக்கிறார். அந்த கட்டளைகளில் எல்லாம் மிக மிக கனமானதும், கடினமானதும் இப்ராகிம் அலை-க்கு சொன்ன கட்டளையாகும். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றை இப்போது கேட்டாலும் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இப்ராகிம் அலை இறைவன் மீது வைத்திருந்த பக்திக்கு அளவே இல்லை. ஏக இறைவனை அவர் வணங்கியதற்காகவும், மற்றவர்களை வணங்க சொன்னதற்காகவும் அப்போது இருந்த அக்கிரமக்காரர்கள் வழங்கிய தண்டனையை ஏற்று நெருப்புக்குழிக்குள் இறங்கினார். அவர் நெருப்புக்கு உடலை தாரை வார்க்க துணிந்தாலும் இறைவன் அவரை அதற்கு அனுமதிக்கவில்லை.

இறைவன் உத்தரவு

மனைவியையும், மகனையும் பிரிந்தார். சொந்த நாட்டை துறந்தார். அதாவது ஏக இறைவனாகிய அல்லா தனது ஆத்ம நண்பராக இப்ராகிமை தேர்வு செய்து இருந்தார். ஏக இறைவன் ஒருவருக்கே தனது உள்ளத்தில் இடம் கொடுத்துவேறு யாருக்கும் இடம் கொடுக்காதவர் இப்ராகிம்.

அப்படிப்பட்ட இப்ராகிம், தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார். அதைப்பார்த்த பலரும், இப்ராகிம் உள்ளத்தில் குழந்தை பாசம் பெரியதாக இடம் பிடித்து விட்டதோ என்ற எண்ணம் மேலிட்டது. ஆனால் அவரது உள்ளம் எப்படிப்பட்டது என்று அல்லாவுக்கு தெரியும். அதை மக்களுக்கு நிரூபிக்க இப்ராகிம், அவரது மகனை அறுக்கும்படி இறைவன் உத்தரவிட்டார். இறைவனுக்கு அடிபணிவதே தன்னுடைய வாழ்வின் நோக்கம் என்பதை வெளிப்படுத்தினார் இப்ராகிம் அலை.

குர்பானி

மகனை பலியாக அறுக்க துணிந்தார். அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, மகனை அறுக்க முற்பட்டபோது இறைவன் அதை தடுத்தார். மகனுக்கு பதிலாக ஆடு ஒன்றினை வழங்கினார். அந்த ஆட்டினை அறுத்து இப்ராகிம் அலை குர்பானி கொடுத்தார்.

முஸ்லிம்கள் அனைவரும் இப்ராகிம் அலை-யின் குணத்தை பெற வேண்டும் என்றே நபிகள் நாயகம் குர்பானியை வலியுறுத்தினார். இப்ராகிம் அலையின் அர்ப்பணிப்பின் உச்சம்தான் இறைவனுக்காக மகனையே அறுக்கத்துணிந்தது. அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு ஒவ்வொருவருக்கும் வேண்டும். குர்பானி என்பது காசு பணத்தை செலவழித்து ஆடு அறுப்பது அல்ல. இப்ராகிம் அலை-யின் உணர்வை, நடைமுறை, சுன்னத் ஆகியவற்றை நினைவில் கொண்டு அத்தகைய அர்ப்பணிப்புகளை குறைந்த பட்ச அளவிலாவது நாம் பின்பற்றுவதாகும்.

தியாக உணர்வு

எந்த அளவு தியாக உணர்வு மேலோங்கி இருக்கிறதோ, இந்த அளவே ஒரு சமூகத்தின் நாகரிகம் முதிர்ச்சிஅடைகிறது. தியாக உணர்வு குறைகிறபோது மனித சமூகம் தனது உயரிய மதிப்புகளை இழக்கிறது. சமூக அமைப்பில் வாழும்போது நமது விருப்பங்களை விட அடுத்தவர்களின் விருப்பத்துக்கு நாம் முன்னுரிமை தரவேண்டியது இருக்கும். அந்தநேரங்களில் நாம் தியாக உணர்வை தவறிவிடக்கூடாது. அப்படிப்பட்ட தியாக உணர்வை கடைபிடிக்க இப்ராகிம் அலை-யின் வரலாறும் பக்ரீத் பண்டிகையின் வரலாறும் நம்மை தயார் படுத்தும்.

இந்த நன்னாளில் வேற்றுமைகள் மறந்து ஒற்றுமையோடு, ஓரணியின் கீழ் நின்று இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்வோம். பகையும் வஞ்சகமும் ஒழியட்டும். நீங்கா பிணிகள் நீங்கட்டும். அனைவருக்கும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என்றார்.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், அப்துல் ரகுமான் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில்  ஈடுபட்டனர்.

நமது நிருபர் : இப்ராஹிம் - ஈரோடு.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: