தமிழக பா.ஜ., தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை நியமிக்கப்பட்டபோதே திராவிட கட்சிகளுக்கு தலைவலி ஆரம்பமானது.
இதுவரை தமிழக அரசியலில் இருந்த நடைமுறைகளையும் ஆடம்பரத்தையும் அவர் இண்டு, இடுக்கு, சந்து, பொந்தெல்லாம் புகுந்து அண்ணாமலை கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதனால் தமிழக அரசியலில் பற்றிக்கொண்டது. இவரை எப்படி சமாளிப்பது என்று தமிழக கட்சிகள் கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் ஐ.பி.எஸ் அண்ணாமலை உடன் மோத வைக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை காங்கிரஸ் நேரடியாக களமிறக்க, வியூகங்கள் தயாராகி வருகின்றன. இந்நேரம் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி யார் என யூகித்து இருப்பீர்கள். அவர் தான் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாட்சாத் சசிகாந்த் செந்தில் தான்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் உத்தி வகுப்பாளராக இருக்கும் சசிகாந்த், நேரடியாக களத்தில் இறங்காமல் கட்சியின் திரைக்கு பின்னால் இருந்து செயல்பட்டு வந்தார். நடந்துமுடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் கூட்டணி உத்திகளை செயல்படுத்தி அதில் வெற்றியும் அவர் கண்டதாக காங்கிரசார் கருதுகின்றனர்.
தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்தை வைத்து தமிழ் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையை எதிர்கொள்வது நல்லது என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. இருவரும் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றியவர்கள் என்பதால், ஒருவரை பற்றி இன்னொருவர் நன்கு அறிந்தவர்களாகவும் உள்ளனர். எப்படி அண்ணாமலை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் பேசி இளைஞர்களை கவர்கிறாரோ, அதேபோல சசிகாந்தை வைத்து இளைஞர்களை கவரலாம் என காங்கிரஸ் கணக்குப்போடுகிறது. சசிகாந்த் மீது ராகுல் நிறைய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்படலாம் என்று ஏற்கனவே பேச்சு அடிபடும் நிலையில், அந்த இடத்தில் சசிகாந்தை கொண்டுவர ராகுல் விரும்புகிறார். சசிகாந்த் வந்தால் காலத்திற்கு ஏற்ப சமூக வலைதளங்களையும் காங்கிரசிற்கு சாதகமாக திறமையாக பயன்படுத்தலாம் எனவும் காங்., மேலிடம் கூட்டி கழித்து பார்க்கிறது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஐ.பி.எஸ் வெர்சஸ் ஐ.ஏ.எஸ் பார்முலா எப்படி வேலைசெய்யும் என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.
0 coment rios: