ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி, கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டி சாவியை மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்று விட்டார்.
இதனையடுத்து கடந்த 16-ந் தேதி அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் சாவி வாசலில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து, சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை யாரோ திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து சிறுவலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நகை, பணத்தை திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் ராமசாமி குடும்பத்தினர் வீட்டின் முன்பு ஒரு பேனர் வைத்துள்ளனர். அதில், 'நகை, பணத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும் வெள்ளாங்கோவிலில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன்பு வைத்துவிடவேண்டும். இல்லை என்றால் நாளை மாகாளியம்மன் கோவிலின் முன் உள்ள சூலாயுதத்தில் கோழி குத்தி பரிகாரம் செய்யப்படும், அவ்வாறு கோழி குத்திவிட்டால் நகையை திருடியவர்கள் குடும்பம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்' என அந்த பேனரில் எழுதியிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: