திங்கள், 9 அக்டோபர், 2023

பவானி, சித்தோடு பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பவானி, சித்தோடு பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டம் பவானி சேர்ந்த முதியவர் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சித்தோடு பகுதியில் உள்ள கடைகளுக்கு ஆம்னி வேன் மூலம் சென்று விற்பனை செய்து வருவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சித்தோடு அருகே உள்ள பட்டறை மேடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் ஆம்னி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த வேனை சோதனையிட்டனர். மேலும், அருகே இருந்த வீட்டிலும் சோதனையிட்டனர்.

அப்போது, அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பவானி சொக்காரம்மன் நகர் பகுதியை சேர்ந்த வில்சன் (வயது 63) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து ஆம்னி வேனில் விற்றதும் தெரியவந்தது.

மேலும், சொக்காரம்மன் நகரில் உள்ள அவருடைய வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததையும் போலீசார் விசாரணையில் கண்டு பிடித்தனர். இதையடுத்து சொக்காரம்மன் நகரில் உள்ள வில்சனின் உறவினர் வீட்டில் பவானி மற்றும் சித்தோடு போலீசார் சோதனையிட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து வில்சனை போலீசார் கைது செய்ததுடன், வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: