ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வாய்ப்பாடி ஊராட்சியில் கடந்த எட்டு மாதத்திற்கு முன் அனுமதி இன்றி தார் கலவை ஆலை நிறுவப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆலை உரிமையாளர் இப்பகுதியில் தார் சாலை போடும் ஒப்பந்தத்தை பெற்றுவிட்டு தார் கலவையாலைக்கு அனுமதி இருந்தால் மட்டுமே தார் சாலை அமைப்பேன் என எட்டு மாத காலமாக மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில்,
நீதிமன்றத்தில் தார் சாலை அமைக்க போலீஸ் பாதுகாப்பு வேண்டுமான உத்தரவு பெற்று விட்டு இன்று தார் கலவை ஆலையை இயக்க முயற்சி செய்தார்.
இதனால் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தார் கலவையாலைக்கு முன்பு ஒன்று கூடினார்கள், இதனால் இவர்களை கைது செய்ய துணை கண்காணிப்பாளர் ஜெயபால் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களை கொண்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையை அறிந்து சம்பவ இடத்திற்கு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் போலீசாரிடமும், ஆலை உரிமையாளரிடமும் பொதுமக்கள் நிலைக்கு எதிராக எதையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சிப்காட் சாயக் கழிவு ஆலைகளால் இந்த கிராமம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நிலையில் தற்போது தார் கலவை ஆலை செயல்பட்டால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எனவும் கூறியதோடு சம்பவ இடத்திலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த தார் கலவை ஆலை செயல்படாது எனவும், இனிமேல் அதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனையடுத்து பொதுமக்களும் போலீசாரும் கலைந்து சென்றனர்.
0 coment rios: