தமிழகத்தில் அதிமுக, பாஜக உறவு இல்லை என்றவுடன் அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவும், ஆர்எஸ்எஸ்ம் பதட்டமான சூழலை உருவாக்க முயல்கிறது என கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஈரோட்டில் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சனியன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60 வது ஆண்டு தொடக்க நிகழ்வு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வருகிறது. அந்த நிகழ்வை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 29, 30 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான கோட்பாடுகளை விளக்கியும், மோடி அரசாங்கத்தினுடைய மக்கள் விரோத, மத வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் விளக்குகிற வகையில் தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை நடத்த தீர்மானித்திருக்கிறோம். குறிப்பாக இன்று மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் தனது கடைசி காலத்தை எட்டியிருக்கும் சூழலில் மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை உருவாக்கி, சிறுபான்மை மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற உதவித்தொகை உள்ளிட்டவை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியலை செய்யும் அதே நேரத்தில், பெரும்பான்மை மக்களின் வாழ்விற்கும் பெரிதாக ஒன்றும் செய்திடவில்லை. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற இந்து மக்கள் தான் பாஜக ஆட்சியின் மோசமான கொள்கையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஜவுளி தொழில் பெரிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் மோடி அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கை தான்.
பருத்தியை அரசாங்கமே கொள்முதல் செய்வதைக் கைவிட்டதன் விளைவுதான் ஜவுளி தொழிலில் புதிய நெருக்கடி ஏற்படக் காரணம். இதுபோல பெரும்பான்மையான மக்களுக்கு விரோதமாக, கார்ப்பரேட் முதலாளிகளின் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஆதரித்துக் கொண்டிருக்கிற மோடி அரசாங்கத்தை எதிர்த்த எங்களின் கிளர்ச்சி பிரச்சாரம் என்பது இந்த மாத கடைசியில் நடத்த இருக்கிறோம்.
விடுதலைப் போராட்ட வீரர், 102 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிற, தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற அரசியல் முகம் என்று சொன்னால் தோழர் என்.சங்கரய்யா. அப்படிப்பட்டவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக சின்டிகேட் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவரக்கு டாக்டர் பட்டம் வழங்க முடியாது என்று மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அதற்கான எந்த காரணத்தையும் அவர் இதுவரை சொல்லவில்லை, இந்தமாதிரி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு சில அளவுகோலை வைத்து பல்கலைக்கழகம் ஏகமனதாக தீர்மானிக்கிறது. அதில் குறுக்கே புகுந்து ஆளுநர் ரவி மறுப்பது அடாவடித் தனமான நடவடிக்கையாகும். பல்கலைக்கழகத்தின் சுய ஆட்சி உரிமையைப் பறிக்கக் கூடிய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். டாக்டர் பட்டம் கிடைக்காததால் தோழர் சங்கரய்யாவிற்கு ஒன்றும் மதிப்பு குறையவில்லை. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் பரிசுகளையோ, பட்டயங்களையோ, பென்சன் கூட வாங்கியது கிடையாது. ஆகவே சங்கரய்யாவிற்கு பட்டம் கொடுப்பதனால் அந்த பல்கலைக்கழகத்திற்குத் தான் பெருமை.
கடந்த 15, 20 நாட்களாக ஈரோடு மாவட்டம் பதட்டமான சூழலில் இருந்தது என்பது தமிழ்நாடே கவலை கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காலங்காலமாக ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட மேற்கு மண்டலம் அமைதியாக, மக்கள் சகோதரத்துவத்தோடு வாழக்கூடிய பண்புள்ள பகுதியாகும். இதர மாவட்டங்களில் சில நேரங்களில் சாதி மோதல், கலவரம் நடக்கும். ஆனால் மேற்கு மணடலத்தில் அப்படி எதுவும் இல்லாமல் பரஸ்பரம் சகோரத்துவத்தோடு வாழும் பகுதி மேற்கு மண்டலம். சமீப காலத்தில் இந்த மேற்கு மண்டலத்தை தங்களின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் சாதாரண பிரச்சனையைக் கூட ஊதிப் பெரிதாக்கி பதட்டமான சூழலை உருவாக்கி இருப்பது கவலையளிக்கிறது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர் அவருடைய வீட்டில் வழிபாடு நடத்துகிறார். எல்லாருக்கும் அவரவர் வழிபாட்டை செய்ய உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், அவர் வீட்டில் புகுந்து, பெண்கள் உளிளட்டோரை தாக்குகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது. அதை எதிர்த்து பலர் காவல்துறையினரை சந்தித்து முறையிடுகின்றனர்.
காவல்துறை அன்றே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனையாக பெரிதாக வந்திருக்காது. பிரச்சனை மோசமடைவதற்கு காவல்துறையினரின் தாமதமும் ஒரு காரணமாகும்.
இந்நிலையில் கிறித்தவ முன்னணியின் பெயரில் சரவணன் (எ) ஜோசப் என்பவர் தாருமாறாக, சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவேன் என பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிறித்தவரின் வீட்டில் இந்து முன்னணியினர் சென்று தாக்கியது எவ்வளவு தவறோ, அதற்கு நிகரான தவறு கிறித்தவ முன்னணி என்கிற பெயரில் சரவணன் (எ) ஜோசப் பேசியது. இந்து மக்களை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
இவ்வாறு சில தனி நபர்கள் வாய்க்கு வந்ததைப் பேசி சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி விடுகின்றனர். சரவணன் (எ) ஜோசப் பிற்கு யார் இந்த அளவிற்கு அதிகாரம் கொடுத்தது? அதிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்து அன்றே கைது செய்திருக்கலாம். அதிலும் காவல்துறை தாமதித்துள்ளது.
சென்னிமலையைக் கைப்பற்றப் போகிறார்கள். முருகன் கையில் வேலுக்குப் பதிலாக சிலுவையைக் கொடுக்கப் போகிறார்கள் என இந்து முன்னணி பிரச்சாரம் செய்திருப்பது, ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, சாதாரண மக்களின் இறை உணர்வை தூண்டி விட்டு தங்கள் மதத்திற்கு ஆபத்து என்ற அச்ச உணர்வை உருவாக்கியிருக்கிறார்கள். இது நியாயமில்லை. யாரோ சில நபர்கள் செய்வதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இறக்குவதென ஆரம்பித்தால், அமைதி, பரஸ்பர நம்பிக்கை இருக்காது. தவறான முறையில் செயல்படுவார்களேயானால், அப்படிப்பட்ட தனிநபர்களைக் கண்டிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக உறவு இல்லை என்று அறிவித்த பிறகு பாஜக ஒரு அரசியல் நோக்கத்திற்காக வேகமாகச் செயல்படும் முடிவிற்கு பாஜகவும், ஆர்எஸ்எஸ்ம் வந்துள்ளது. அதற்காக சாதாரண மக்களை, ஏழை, எளிய, அப்பாவி மக்களை கோபப்படுத்தும் வகையில், ஆத்திரப்படுத்தும் வகையில் சில வசனங்களை சொல்லி விட்டு, உணர்ச்சி வயப்படும் வகையில் தூண்டி விட்டு பதட்டமான சூழலை உருவாக்கும் வகையில் இந்து முன்னணி, ஆரஎஸ்எஸ் செயல்படுகிறது.
இவ்வாறு பகிரங்கமாக மக்கள் மத்தியில் மோதல் போக்கை உருவாக்கும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். சாதாரணமாக மத்திய அரசை எதிர்த்து நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறையினர் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கின்றனர். ஆனால் மக்களை கோபமூட்டும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகிறது.
எனவே இந்த மாதிரியான போக்குகளுக்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதியளிக்கக் கூடாது. ஈரோடு மக்களிடையே தேவையற்ற பதட்டத்தை, அமைதியற்ற சூழலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர். எல்லா மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மதச்சார்பற்ற கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்களை இணைத்து ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
அமைதியான சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிக்கு அனைத்து மதத்தினரும், மக்களும் பேராதரவு அளிக்க வேண்டும்.
ஒரு சிறிய சம்பவத்தில் வன்முறை ஏற்பட்டால் அந்த தீயை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதிகமான வலியையும், வேதனையையும் அனுபவிக்கக் கூடிய நிலைமை ஏற்படும். அப்படிப்பட்ட சூழல் வர வேண்டும் என்றுதான் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் விரும்புகின்றன. அதற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது.
இதில் எல்லா மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று செயல்படும் சில தனி நபர்களை சாதியைச் சொல்லி, தாக்குவோம், வீடுகளில் நுழைவோம் என்று சமூக வலைதள பதிவுகளை செய்வது விரும்பத்தக்கதல்ல. காவல்துறை இதுபோன்ற சமூக வலைதளப் பதிவுகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அனுமதிப்பதுதான் வன்முறை உருவாவதற்கான களமாக மாறுகிறது. எனவே காவல்துறை மேலும் விழிப்பாக செயல்பட வேண்டும். பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், சி.முருகேசன் மற்றும் மூத்த தோழர் கே.துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: