ஈரோடு மாவட்டம், மூலக்கரை புதுப்பாளையம் பிரிவு பகுதியில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். வேலை முடிந்ததும், அந்த நிறுவனத்தின் பேருந்து மூலம் இவர்கள் புதுப்பாளையம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வேலை முடிந்ததும், வடமாநில தொழிலாளர்களை 2 பேருந்தில் ஏற்றிக்கொண்டு புதுப்பாளையம் நோக்கி அந்த பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டு இருந்தன.
அப்போது ஈரோடு அருகே உள்ள மூலக்கரை புதுப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள வளைவில் திரும்பியபோது திடீரென முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பின்னால் வந்து கொண்டு இருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பின்னால் திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், அந்த தனியார் நிறுவன பேருந்துகள் மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவரான ஈரோடு செந்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 44), கண்டக்டரான வெள்ளோடு பகுதியை சேர்ந்த துளசிமணி (57) மற்றும் வடமாநில பெண் தொழிலாளியான சம்பதி (20) உள்பட 3 பேருந்துகளிலும் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டார் காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர் நேரில் பார்த்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இந்த விபத்து காரணமாக ஈரோடு - பெருந்துறை ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
0 coment rios: