ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து 3வது நாள் சாணியடிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், புதன்கிழமை (நேற்று) காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. பின்னர் மதியம் அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நிகழ்ச்சி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தாரை தப்பட்டைகள் முழங்க நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் புல்லினால் மீசைகள் செய்து அலங்காரம் செய்யப்பட்ட ஒருவர் கழுதை மேல் அமரவைத்து சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக ஆடிப்பாடி அழைத்து வரப்பட்டார். கோவில் கருவறையில் உள்ள பீரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர் மற்றும் வாலிபர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோவிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக உருட்டி ஒருவருக்கொருவர் மீது அடித்து விளையாடி மகிழ்ந்தனர். சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இவ்விழாவில், தாளவாடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்.
0 coment rios: