ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு நாளை மறுநாள் (புதன்கிழமை) நவம்பர் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது தொடர்பாக விழிப்புணர்வினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களை நாடி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களுக்கும் உரிய தகவல்களை வழங்குமாறு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: