செவ்வாய், 21 நவம்பர், 2023

சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்; ஈரோட்டில் நாளை தொடக்கம்

தமிழ்நாட்டில் வருமுன் காப்போம் திட்டத்தை வழங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழி வந்த மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி, சட்டமன்ற அறிவிப்பு அரசாணை எண்.34-ன்படி, நாளை (நவ.22) புதன்கிழமை முதல் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் முன்னோட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பொதுவான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு மக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கூறிய புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட 82 மையங்களில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டமானது 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள் உட்பட 116 மையங்கள் மூலம் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய்புற்றுநோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்படின் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளது.

பொதுமக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய பகுதிகளில் மருத்துவக் குழுவினரைக் கொண்டும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு வட்டாரத்தை சேர்ந்த காளிங்கராயன்பாளையம் துணை சுகாதார நலவாழ்வு மையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் இத்திட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது.

ஆகவே ஈரோடு மாவட்டத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் இல்லம் தேடி வரும் மருத்துவப் பணியாளர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்ட மையங்களை அணுகி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுமக்களும் புற்றநோய்க்கான அறிகுறிகள் இருப்பினும், இல்லாவிடினும் இப்பரிசோதனையினை மேற்கொண்டு தங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: