இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :-
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 26ம் ஆண்டு பாரதி விழா டிசம்பர் 11ம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பாரதியியல் ஆய்வாளரும் வரலாற்றியல் வல்லுனருமான பேராசிரியர் வெங்கடாசலபதிக்கு பாரதி விருது வழங்கப்படவுள்ளது.
இவர் சமூக வரலாறு பண்பாட்டு வரலாறு, அறிவாண்மை வரலாறு, இலக்கிய வரலாறு போன்ற பன்முக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ் வரலாற்றுக் களத்திற்கு வலு சேர்த்தவர். பாரதி குறித்த இவரது புதிய தேடலும் கண்டுபிடிப்புகளும் பாரதியியலுக்கு பெரும் பங்களிப்பாக விளங்குகிறது.
நிகழ்ச்சிக்கு, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் தங்கவேலு தலைமை வகிக்கிறார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை நிகழ்த்துகிறார். கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து புறப்படும் பாரதி ஜோதியை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் பேராளர் கொழந்தவேல் இராமசாமி ஏற்றி வைத்து அணிவகுப்பைத் தொடங்கி வைக்கிறார்.
சொற்பொழிவாளர் பேராசிரியர் ராஜாராம் புதுமைப்பித்தன் படத்தைத் திறந்து வைத்து இலக்கியவுரையாற்றுகிறார். பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதி விருதை வழங்கி விழாச் சிறப்புரையாற்றுகிறார். விருதாளர் வெங்கடாசலபதி ஏற்புரை வழங்குகிறார். பேரவையின் செயலாளர் அன்பரசு நன்றியுரையாற்றுகிறார்.
முன்னதாக விழாவன்று மாலை 4 மணிக்கு கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து 'பாரதி ஜோதி 'யை ஏந்தியவாறு அணிவகுப்பு நகரில் முக்கிய வீதிகளை வலம் வந்து விழா அரங்கம் வந்தடையவுள்ளது. இந்நிகழ்வு மாநிலம் தழுவிய ஒன்றாக நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பாரதி அன்பர்கள், இலக்கியவாணர்கள், படைப்பாளிகள், ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று சிறப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 coment rios: