சென்னை ராஜ கீழ்பாக்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). இவர் தனது குடும்பத்துடன் கடந்த 8ம் தேதி கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். பின்னர் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் டவுனில் இருந்து சென்னைக்கு ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். அப்போது, ரயில் நேற்று அதிகாலை ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது அருண்குமாரின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஐ-போன் மாயமானது. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால், செல்போனை மர்ம நபர் திருடி சென்றதை உணர்ந்தார். இதுகுறித்து அருண்குமார் ஈரோடு ரயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி செல்போனை திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள பார்க் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். மேலும் அவரிடம் விலை உயர்ந்த ஐ-போன் இருந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் ஈரோடு ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் மேற்கு வங்க மாநிலம் முர்சிடாபாத் பஜிட் பூர் பகுதியை சேர்ந்த அசிடுல் மகன் மித்து எஸ்கே (வயது 31) என்பதும், அவரிடம் இருந்தது அருண்குமாரின் ஐ-போன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மித்து எஸ்கேவை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த ஐ-போனை பறிமுதல் செய்தனர்.
0 coment rios: