சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடி பட்டக்காரன் காடு பகுதியை சேர்ந்தவர் லீலா கிருஷ்ணன் (28). கால் டாக்சி டிரைவர். இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீஜா (24) என்பவருடன் திருமணம் ஆனது. ஸ்ரீஜா ஈரோட்டில் உள்ள ஓட்டல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லீலா கிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மது குடித்து வந்து ஸ்ரீஜாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீஜா, கணவரை விட்டு பிரிந்து, வெள்ளிதிருப்பூரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கு முன் லீலா கிருஷ்ணன், அவரது மனைவி ஸ்ரீஜாவை சமாதானம் செய்து அழைத்து வந்தார். பின்னர், கடந்த வாரம் லீலா கிருஷ்ணன் அவரது மனைவியுடன் ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு வேளாளர் திருமண மண்டபம் அருகே காம்ப்ளக்சில் வீடு வாடகைக்கு எடுத்து வசிக்க துவங்கினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லீலா கிருஷ்ணன் அவர் வேலை பார்க்கும் கால் டாக்சி நிறுவனத்தில் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மது குடித்து வந்ததால் லீலா கிருஷ்ணனிடம், ஸ்ரீஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த லீலா கிருஷ்ணன், ஸ்ரீஜாவை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஸ்ரீஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த உறவினர்கள் ஸ்ரீஜாவை பார்த்தபோது, மூக்கில் ரத்தம் மற்றும் நுரை வந்த நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்து தனியார் ஆம்புலன்சில் ஸ்ரீஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஸ்ரீஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அதில், ஸ்ரீஜாவின் உடலில் காயங்கள் இல்லை என்பதும், ஆனால், கைகளால் கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீஜாவின் அம்மா சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தலைமறைவான கணவர் லீலா கிருஷ்ணனை தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவான லீலா கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தற்போது அவர்களது இரண்டு குழந்தைகளும் யார் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர். குடிப்பழக்கத்தால் ஒரு அழகிய குடும்பம் சிதைந்துள்ளது.
0 coment rios: