ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறையை அடுத்த வேலங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவருக்கு திவ்யா (வயது 26) என்ற மனைவியும் ரோகித் (வயது 2) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரோகித் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
குழந்தை ரோகித்துக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் குழந்தை உயிரிழந்ததாக கூறி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்ட திவ்யா மற்றும் விஜயகுமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும், குழந்தையின் சடலத்தை, பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என கூறி கோஷமிட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈரோடு மாநகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். ஆனால், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், குழந்தையின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி தான் சடலத்தை ஒப்படைக்க முடியும் என போலீசாரும், மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்ததால் உறவினர்கள் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்ட காவல்துறையினர், விஜயகுமார் உள்ளிட்ட உறவினர்களை மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தங்களது காரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ, போராட்டத்தில் ஈடுபடா வண்ணம் பாதுகாக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0 coment rios: