ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அப்பிரிவின் மாநகர் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் பென்ஹர் வெஸ்லி, பொன்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அப்பிரிவின் மாநில செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயரை மத்திய அரசு இந்தியில் மாற்றம் செய்ய பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ், திமுக மற்றும் பல்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நிலைக்குழுவில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய அதினியம் என இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் வழங்கியதை கண்டித்தும், இந்திய அரசியல் சாசனம் அட்டவணையை 8 அங்கீகரித்துள்ள 22 இந்திய மொழிகளிலும் மத்திய அரசு அனைத்து சட்டங்களையும் மொழி பெயர்த்து தர வேண்டும்.
தற்போது ஆன்லைன் மூலம் நீதிமன்றத்தில் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ள போதிலும், நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்படும் பல்வேறு மனுக்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் நீதிமன்ற கட்டண வில்லைகள் ஒட்ட வேண்டிய சூழ்நிலையில், நீதிமன்ற ஸ்டாம்புகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அரசு போதுமான அளவு நீதிமன்ற முத்திரைத்தாள்கள் ஸ்டாம்புகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக காங்கிரஸ் மனித உரிமை பிரிவு தலைவர் வழக்கறிஞர் வினோத் மாரியப்பா வரவேற்றார். முடிவில் வழக்கறிஞர் சித்ரா நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் ராஜீவ்காந்தி, சாமிநாதன், கார்த்தி, வேல்முருகன், கீர்த்தி, மோகன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: