ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சில நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்கின்றன.
அதேபோல் வனப்பகுதியை ஒட்டிய சாலைகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோட்டை கடந்து செல்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கே.என்.பாளையம்- கடம்பூர் செல்லும் சாலையில் மல்லியம்மன் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் காட்டு யானைகள் குட்டியுடன் கூட்டமாக வனச்சாலை கடந்து சென்றன. இதை இரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி யாரோ எடுத்துள்ளார்.
இது குறித்து கடம்பூர் வனத்துறையினர் கூறுகையில், கடம்பூர் சாலையில் குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் இருப்பதால் யானைகள் ரோட்டை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்..
யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றை விரட்டவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும், யானைகளை செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
0 coment rios: