ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில், மனித வன விலங்கு முரண்பாடுகளை தவிர்க்க வனத்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நீலகிரி எம்.பி ஆர்.ராசா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தற்போது நடைபெற்று வரும் யானை புகா அகழிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட யானை புகா அகழிகளின் தற்போதைய நிலை, சூரிய தொங்கு மின் வேலிகளின் விவரம், விலங்குகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், பயிர் சேதம், கால்நடைகள் இழப்பு, உடைமைகள் சேதம் அவற்றிற்க்கு வழங்கப்பட்ட நிவாரண தொகைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் 2022-2023 முதல் தற்போது வரை ஆசனூர் வனக்கோட்டத்தில் வழங்கப்பட்ட சாலை பராமரிப்பிற்க்கான அனுமதி வழங்கப்பட்ட விபரங்கள் மற்றும் நிலுவையிலுள்ள சாலை அனுமதிக்கான விபரங்களையும் ஆய்வு செய்தார்.
வன உரிமைச் சட்டம், 2006-ன்படி நிலுவையிலுள்ள சமுதாய உரிமைகளை உடனடியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்க மக்களவை உறுப்பினரால் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 5 கி.மீ தூரமும், யானைகள் திட்டத்தின் கீழ் 4கி.மீ தூரமும் மொத்தம் 9 கி.மீ தூரத்திற்கு ருபாய் 46.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக யானைகள் புகா அகழிகள் அமைக்கும் பணி தாளவாடி சரகம் (5 கி.மீ), ஜீரகஹள்ளி சரகம் (1.5 கி.மீ), ஆசனூர் சரகம் (2.5 கி.மீ) ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, யானைகள் திட்டத்தின் கீழ் 5 கி.மீ. தூரமும், தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 கி.மீ. தூரமும் மொத்தம் 15 கி.மீ. தூரத்திற்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் இவ்வாண்டு யானைகள் புகா அகழிகள் பராமரிப்பு பணி தாளவாடி சரகம் (5 கி.மீ), கேர்மாளம் சரகம் (10 கி.மீ) ஆகிய சரகங்களில் பணிகள் நடைபெற்று வருவதையும், தாளவாடி வனச்சரகத்திற்குள்ள நெய்தாளபுரம், கோடம்பள்ளி மற்றும் அல்லாபுரம் தொட்டி ஆகிய கிராமங்களை சுற்றி சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு புதியதாக யானை புகா அகழி வெட்டும் பணியும், 10 கி.மீ. தூரத்திற்கு பராமரிப்பு பணியும் நடைபெற்று வருவது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் சுதாகர் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 coment rios: