வள்ளி கும்மி நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சமூகம் மட்டுமின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்குப்பெறலாம் என பெருந்துறையில் நடைபெற்ற வள்ளி கும்மி விழாவில், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் கதைகளை பாடி அதற்கு ஏற்ப நடனம் ஆடுவது வள்ளி கும்மி நடன கலை ஆகும், பாரம்பரிய நடனமான இக்கலையை மீட்டெடுக்க வள்ளி கும்மி குழுவினர் திரளான கொங்கு மக்களை திரட்டி நடனம் ஆட வைத்து தொடர்ச்சியாக அரங்கேற்ற விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லம்மா நகரில் மங்கை வள்ளி கும்மி குழுவின் நூறாவது அரங்கேற்ற விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விழாவில் ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வள்ளி கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர்.
பாரம்பரியமிக்க ஒரே வண்ண ஆடை அணிந்து, முருகப்பெருமானின் பாடல்களுக்கு ஏற்ப அசைந்து நடனம் ஆடியது, வள்ளி கும்மி நடனத்தை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, வள்ளி கும்மியாட்டம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்க உதவும் பயிற்சி. இந்த கும்மியாட்டத்தின் மூலமாக சமுதாய உணர்வுகள் நல்ல முறையில் பெருகி வருகிறது. இதனால், இளைஞர்கள் நமது வரலாற்று பெருமைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.
பல்வேறு தரப்பினர் மூலமாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும், வள்ளி கும்மி மூலம் நமது பெருமைகள் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மற்ற கலைகளுக்கு விருதுகள் வழங்குவது போன்று, வள்ளி கும்மி நிகழ்ச்சிக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளி கும்மி கலைநயத்தை சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் விதத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சமூகம் மட்டுமின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்குப்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: