வெள்ளி, 8 டிசம்பர், 2023

ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கனி மார்க்கெட்டில் வணிக வளாகத்தில், பழைய கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் 292 கடைகள் உள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் 2022ல் வணிக வளாகத்தை திறந்து வைத்தார். வணிக வளாக கடைகள் குத்தகைக்கு ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே பழைய கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்தவர்கள் கோரிக்கை முன் வைத்தனர். இதனடிப்படையில் 40 ஆண்டாக பழைய கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் ஏற்கனவே பழைய கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்தவர்களுக்கு முன்னுரிமை குறித்து பரிசீலனை செய்வது தொடர்பாக தங்களிடம் உள்ள சான்றாவணங்களை 8,9 மற்றும் 11 தேதிகளில் காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் பெரிய சேமூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சமர்பிக்க மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியிருந்தார். வியாபாரிகள் ஆதார் எண், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஏற்கனவே கடை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அதற்கான உத்தரவு நகல், வைப்பு தொகை செலுத்திய ரசீது, வாடகை ரசீது, ஒப்பந்த பத்திரம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட பிற சான்றுகள், கடை எண் மற்றும் அமைவிடம் குறித்து விபரம் கோரப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று சான்றாவணங்கள் சரிபார்த்தல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பழைய கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்தவர்கள் சான்றாவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். 196 வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகத்தில் கடை ஒதுக்கீடு செய்து கொடுக்க கோரினர். இதற்கான கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், செயற்பொறியாளர் விஜயகுமார், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன்,பொருளாளர் முருகானந்தம்,பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, மண்டல தலைவர் பழனிச்சாமி, மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சான்றாவணங்கள் சரிபார்த்த பின் 50 வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது.மீதமுள்ளவர்கள் சான்றாவணங்கள் அளித்தவுடன் கடை ஒதுக்கீடு செய்ய கால அவகாசத்துடன் உறுதியளிக்கப்பட்டது.பழைய கனி மார்க்கெட் வியாபாரிகளுக்கு சதுர அடி ரூ.93க்கும், வைப்பு தொகை ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் செலுத்த வேண்டும். வைப்பு தொகையை தவணை முறையில் 6 மாதங்களுக்குள் செலுத்தும் வகையில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது. இதனை பழைய கனி மார்க்கெட் வியாபாரிகள் ஏற்று கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: