செவ்வாய், 12 டிசம்பர், 2023

கோபி அருகே டி.என்.பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ளது கொங்கர்பாளையம் ஊராட்சி. இங்குள்ள வெள்ளக்கரடு பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 52). விவசாயியான இவர் தனது வீட்டையொட்டி உள்ள தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கால்நடைகளை தோட்டத்தில் கட்டி விட்டு தூங்க சென்று விட்டார். இரவு 1 மணி அளவில் தோட்டத்தில் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

இதனால் தூங்கி கொண்டிருந்த நஞ்சப்பன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 4 கன்றுக்குட்டிகளில் ஒரு கன்றுக் குட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்து விவசாயிகளின் உதவியுடன் கன்றுக்குட்டியை தேடினார். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டது. இரவு நேரம் என்பதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் பட்டாசு வெடித்து சத்தம் எழுப்பினர். மேலும் இதுகுறித்து நஞ்சப்பன் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் நஞ்சப்பனின் தோட்டத்தை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்

பின்னர் கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டு பகுதிக்கு சென்ற வனத்துறையினர் பார்த்தனர். அங்கு வயிற்று பகுதி கடித்து குதறப்பட்ட நிலையில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை நஞ்சப்பனின் தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை தாக்கி சிறிது தூரம் இழுத்து சென்று கடித்து கொன்றுள்ளது. பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது தெரிய வந்துள்ளது.

சிறுத்தையின் நடமாட்டத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தநிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் உடனடியாக வெள்ளக்கரடு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: