ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். அவ்வாறு வந்து செல்லும் யானைகள், அணையின் நீர்த்தேக்க கரையில் செழித்து வளர்ந்து வரும் புற்களை மேய்வது வழக்கம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நேற்று) குட்டியுடன் வந்த யானைகள் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வளர்ந்துள்ள புற்களை மேய்ந்தபடி சுற்றித் திரிந்தன. அப்போது, ஒரு குட்டி யானை சுட்டித்தனமாக கீழே படுத்துக்கொண்டு தரையில் உரசி விளையாடியதோடு, அங்கிருந்த கொக்குகளை துரத்தியபடி விளையாடியது.
குழந்தைபோல் குட்டி யானை அங்கும் இங்கும் ஓடியாடிய காட்சி கண்களை கவரும் விதமாக அமைந்திருந்தது. தற்போது, இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
0 coment rios: