சனி, 20 ஜனவரி, 2024

ஈரோட்டில் 3 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், புதிய பேருந்துகளின் சேவையினை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்திற்கான 3 புதிய பேருந்துகளின் சேவையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 3 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1,666 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 100 புதிய பேருந்துகளின் சேவையினை முதல்வர் ஸ்டாலின் சென்னை, பல்லவன் சாலை, பல்லவன் இல்லம், மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் துவக்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை - ஈரோடு மண்டலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 18 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 13 புதிய பேருந்துகளில் 10 புதிய பேருந்துகளின் சேவையை அவர் துவக்கி வைத்துள்ளார். அதன்படி, ஈரோடு மண்டலம் சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கான 3 புதிய பேருந்துகளின் சேவை ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு - இராஜபாளையம் (வழி- கரூர், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்), அந்தியூர் - இராமேஸ்வரம் (வழி - ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, பரமக்குடி, இராமேஸ்வரம்) மற்றும் அந்தியூர் - கும்பகோணம் (வழி -ஈரோடு, கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம்) ஆகிய வழிதடங்களில் இயக்கப்படவுள்ளது. இந்த புதிய பேருந்துகள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், ஈரோடு மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, மத்திய பேருந்து வளாகத்தில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி 1ம் மண்டல குழு தலைவர் பழனிசாமி, பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மேலாளர் (வணிகம்) ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: