ஈரோடு மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) முருகேசன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 75 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
0 coment rios: