மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜனவரி.23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுபாஷ் சந்திர போஸின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஆளுநர் ரவி பேசுகையில், 1942ம் ஆண்டுக்கு பின் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லையென்றால் இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்திருக்காது. நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது. இவ்வாறு அவர் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சூரம்பட்டி:-
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் சந்திப்பில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், தொழிலாளர் காங்கிரஸ் டிசிடியு மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து,ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி ஞானதீபம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மூலப்பாளையம்:-
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ஈரோடு மூலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை வகித்தார் . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் முத்துக்குமார் கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா, வட்டாரத் தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, ரவி. ஓசி சண்முகம், டிஸ்கோ முருகேஷ், ராவுத்குமார், சர்வேஸ்வரன், சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோபிசெட்டிபாளையம்:-
கோபி பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சரவணன் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுநரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் இந்துஜா வெங்கடாசலம், கோபி நகர தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: