ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் (முருகன்) கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி , இந்த ஆண்டுக்கான தைப்பூசத் தேரோட்ட விழா வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
தேரில் எழுந்தருளிய பொன்மலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 30 அடி உயர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். கிராமத்தைச் சுற்றி வந்த தேர், தெருவுக்குள் நுழைய திரும்பியபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் சிக்கிக் கொண்டது. இதில், நிலை தடுமாறிய தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட பக்தர்கள் அங்கிருந்து ஓடியதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், முன்னதாக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு தேர் மீட்கப்பட்டது. பின்னர், மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்று நிலை சேர்த்தனர்.
0 coment rios: