ஈரோடு மாவட்டம் சிப்காட் நசியனூர் பார்க் அருகில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஈரோடு மண்டலத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கே.எம்.எஸ். 2023-24 பருவத்திற்கு கீழ்பவானி பாசன பகுதிகளில் முதற்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூர், புதுவள்ளியம்பாளையம், அளுக்குளி, கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது. அந்த வகையில், நசியனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடையின் அடிப்படையில் விவசாயிகளின் நலனுக்காக மாவட்டத்தில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லானது, குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக கிலோவிற்கு நெல் கிரேடு "ஏ" ரூ.2,310ம், நெல் பொது ரகம் ரூ.2,265ம் என்ற அடிப்படையில், இ-கொள்முதல் முறையில் விவசாயிகளின் கைரேகை பதிவுசெய்து, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டதற்குண்டான தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இசிஎஸ் அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
கடந்த கே.எம்.எஸ்.2022-23 பருவத்தில் ஈரோடு மாவட்டத்தில் 74 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அவற்றின் மூலம் 96865.520 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதன் மூலம் 11,709 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கடந்த பருவத்தில் நசியனூரில் இரண்டு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அவற்றின் மூலம் 1533.360 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலம் 230 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
நடப்பு கே.எம்.எஸ். 2023-2024 பருவத்தில் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் 24613.680 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றின் மூலம் 3417 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். நடப்பு கே.எம்.எஸ். 2023-2024 கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் மூலம் தோராயமாக 50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரகாஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பானுமதி, துணை மேலாளர் ரமேஷ்பாபு, இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா, ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 coment rios: