வியாழன், 11 ஜனவரி, 2024

ஈரோடு மாவட்ட செய்திகள் | Latest Erode News: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில். இந்த கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. இதனால் பாரியூர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இக்கோவில் பசுமை நிறைந்த வயல்களால் சூழப்பட்ட பகுதியின் மையத்தில் அமைந்து உள்ளது. பாரியூரில் கொண்டத்து காளியம்மன் கோவில். அமரபணீசுவரர் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில் என 4 கோவில்கள் காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2-வது வாரத்தில் குண்டம் திருவிழாவையொட்டி பூச்சாட்டப்படும். அன்று முதல் பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார் கள். பூச்சாட்டப்பட்ட நாட்களில் இருந்து 12-வது நாள் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு திரளாக வந்து அம்மனை தரிசிப்பார்கள்.

மாலையில் சந்தனக்காப்பு அலங்காரம் கண்கொள்ளாத காட்சியாக அமையும். அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவ ராக அம்மனை தரிசித்து அருள் பெறுவார்கள். 14-வது நாள் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து மகிழ்வார்கள்.

மேலும், கோவிலின் சிறப்பான மண் திருநீறு, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அம்மன் தேர் வீதி உலா வரும் வழியில் உள்ள மண்ணை எடுத்து சுத்தம் செய்து அதை திருநீறாக வழங்கப்படுகிறது. இதனால், அம்மனின் அருள் இருக்கும் என்ற நம்பிக்கையில் மண் திருநீறு வழங்கப்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவானது கடந்த 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் இரவு முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின் ஆறு கால பூஜைகள் நடைபெற்றது.


பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 30 டன் அளவுடைய எரிகரும்புகளை கொண்டு குண்டத்திற்கான பணிகள் துவக்கப்பட்டது. இரவு முழுவதும் விறகுகளை எரித்து குண்டம் தயார் செய்யப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து நந்தா தீபம் ஏற்றப்பட்ட பின்னர் கோவிலின் தலைமை பூசாரி ராமாணந்தம் குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார்.

அதன் பின்னர் கடந்த 15 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த கோபி, வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், இந்து சமய அறநிலையத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீ மிதித்தனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.

விழாவையொட்டி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் கோபி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: