ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1.55 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சிங்கம்பேட்டை, அனந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.12.58 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி சீரமைப்பு பணியினையும், அதே பகுதியில் உள்ள கழிவுநீர் வரத்து கால்வாயினையும் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பூனாச்சி, புதுவலவு காலனியில், அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருவதையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், ஒலகடம் ஊராட்சியில், அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நாகிரெட்டிபாளையம் குளம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, குமரன் நகர் பகுதியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறுவர் பூங்காவினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.18 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.13.29 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டப்பாளையம் முதல் வெள்ளக்கரடு வரை சாலை உறுதிப்படுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் என மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: