வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பவானி ஒன்றியத்தில் ரூ.2.58 கோடியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 225 கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கவுந்தப்பாடி ஊராட்சி கவுந்தப்பாடி சந்தை அருகில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தமான நீரை அம்மா பூங்கா செடிகளுக்கு பயன்படுத்தும் பணியினையும், சந்தை வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான மகளிர் தொழில் கூடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

தொடர்ந்து, தட்டார்பாளையம் ஊராட்சி தட்டார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவர் கழிப்பறையினையும், வைரமங்கலம் ஊராட்சி, செட்டித்தோப்பு பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், அதேப்பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடைக்கு கழிப்பறை கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் குடிநீர் நிலத்தடி நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், மைலம்பாடி ஊராட்சி, கண்ணாடிபாளையத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம் ரூ.1.78 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும், மைலம்பாடி ஊராட்சி, சாணார்பாளையம் கண்ணன்கரடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.25.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் சன்னியாசிப்பட்டி பகுதியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டுள்ளதையும் என மொத்தம் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மைலம்பாடி ஊராட்சி, கண்ணாடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் வகுப்புக்குள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடியில் குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் குழந்தைகளின் உயரம், எடை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது, பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சந்திரசேகர், செங்கோட்டையன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: